ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா......!

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா......!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கோடைகால பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இரு தினங்களாக அவ்வப்போது பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. சென்னையின் சில இடங்களில் கூட ஆலங்கட்டி மழை பெய்ததாக சொல்கிறார்கள்.

நேற்று திருச்சியை அடுத்த வாத்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வைக்கோல் மூட்டம் மற்றும் வீட்டின் கூரை உள்ளிட்டவை சூறாவளி காற்றில் அங்கும், இங்கும் பறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் பகுதிகளில் அதிவேக காற்று, ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடியாத்தம் சூட்டியுள்ள பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்தது.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் பகுதியில் திடீரென வயல்வெளியில் குண்டு மழை போல் ஆலங்கட்டி மழை பெய்தது. வானில் இருந்து வெடிகுண்டுகளை வயல்வெளியில் வீசுவது போல் விழுந்ததால் இந்த ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்ததோடு, சிலர் ஆச்சரியமாகவும்மும் அடைந்தனர்.

அதே போல் வந்தவாசி பகுதியில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. இந்த ஆலங்கட்டி மழையில் மழைக்கட்டிகளை கையில் ஏந்தியவாறு பாத்திரங்களில் பொதுமக்கள் சேர்த்து கொண்டு சென்று தங்களுடைய வீடுகளில் வைத்தனர். இந்தப் பகுதிகளில் இது போன்ற மழையை வாழ்நாளில் நாங்கள் கண்டதில்லை என பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் சென்னாவரம், பிருதூர், மருதாடு, மும்முனி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை நீடித்தது. அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி ஆலங்கட்டிகளை சேகரித்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com