

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி என்பது சமூகத்தை சீர்குலைக்கும். கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக தமிழ் நாட்டில் திமுக அரசு பல்வேறு புதிய திட்டங்கள் போடுவதும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள்
இத்திட்டங்களை எதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.இதற்கு முன்பு 12 மணி நேர மசோதா நிறைவேற்றப் பட்டு எதிர்ப்பு கிளம்பியது . தற்போது திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி இதற்கும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டது.
இதற்கு பாமக, அமமுக,பாஜக, உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளது. இது சமூக சீர்கேடிற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளதோடு, இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.