ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர் - கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்!

ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர் - கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்!
Published on

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து தீவிரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்பதையே ஆளுநரின் இத்தகைய அத்துமீறல் போக்கு வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

2023ம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப் பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் அவையை தொடங்குவதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம்.

அப்படிதான் இன்றும் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிக்கும்போது பல இடங்களில் உரையில் இடம்பெற்றிருந்த வார்தைகளை தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக அவர் விருப்பம்போல் வார்த்தைகளை சேர்த்து படித்தார். இது அரசமைப்பு சட்ட வரம்புகளை மீறிய செயலாகும்.  

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டது முதல், அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பியும் அதை அலட்சியப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறி வருகிறார்.

 ஆளுநர் உரை என்பது தமிழக அரசு தயாரித்து அளிக்கிற கொள்கை அறிவிப்பாகும். அந்த உரையை முழுமையாக வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமையும், பொறுப்புமாகும். அதை மீறுகிற வகையில் ஆளுநர் தனது உரையில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, இடம் பெறாத சில வார்த்தைகளை கூறியது அப்பட்டமான அரசியல் சட்ட விதிமீறலோடு, சம்பிரதாயங்களையும் புறக்கணிப்பதாகும்.

இத்தகைய விதிமீறல்கள் தமிழக அரசிற்கு விடப்பட்ட சவால் என்பதை விட, அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தலாகும். தமிழக ஆளுநர் இத்தகைய அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக்கூட புரிந்துகொள்ளாமல் உதாசீனப்படுத்துகிற திரு. ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர். தமிழக அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பான ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகங்களை தமிழக ஆளுநர் தவிர்த்ததைப் போல, மத்திய அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பு வாசகங்களை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் அதிலிருந்து சில வாசகங்களை தவிர்த்து வாசித்தால் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா ? பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா ?

தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்துவது மிகமிக அவசியமாகிவிட்டது.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com