2ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காரணம் என்ன?

2ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காரணம் என்ன?

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், புழக்கத்தில் இருக்கும் அனைத்து 2000 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதை செப்டம்பர் 30, 2023க்கு முன் அருகில் இருக்கும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. 

ஏன் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கான காரணம் என்ன?

டந்த 2016 பணமதிப்பிழப்பின் போது, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுக்களை சட்டபூர்வமாக திரும்பப் பெற்ற பிறகு, பொருளாதாரத்தை அது எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க, மாற்றுப் பணமாக கொண்டு வரப்பட்டது தான் இந்த 2000 ரூபாய் நோட்டுகள். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 1000, 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. 

அந்த நேரத்தில் அதற்கான நோக்கம் நிறைவேறியதாலும், மற்றவகை ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் மக்களுக்குக் கிடைப்பதாலும், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதில் பெரும்பாலானவை 2017க்கு முன் அச்சிடப் பட்டவையாகும். அவற்றின் ஆயுட்காலம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. 

தற்போது இதனுடைய ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் இருப்பதாலும், மக்களுடைய பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அறிந்த ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 

மேலும் 'கிளீன் நோட் பாலிசி' அடிப்படையில், மக்களுக்கு தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. ஏனென்றால் இதைப் பயன்படுத்தி அதிகப்படியான கள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறதாம். 

மக்களுடைய பயன்பாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இல்லாமல் போனதால், அதை கருப்பு பணமாக பலர் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் ஆர்பிஐ யூகித்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தாத நிலையில் தற்போது இதை தடை செய்தால், கருப்பு பணம் வெளியே வர வாய்ப்புள்ளதாக RBI தெரிவிக்கிறது. 

தற்போது உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, உங்களுக்கு அருகே இருக்கும் வங்கிகளுக்குச் சென்று மாற்றிக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும். இதுவே உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய எந்த வரம்புகளும் இல்லை. மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை சராசரி பணம் பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.

2ஆயிரம் ரூபாய் குறித்து 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு சொன்னது என்ன?

மத்திய ரிசர்வு வங்கி தரப்பில், 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பொறுவதற்கு இப்படிப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், கருப்பு பணத்தை அழிக்க கொண்டுவரப்பட்டதுதான் 2000 ரூபாய் என பணமதிப்பிழக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், சமீபத்தில்கூட நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜ்மணி படேல், ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்போகிறதா, 2000 ரூபாய் நோட்டை விநியோகிக்க வேண்டாமென வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறதா, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தும் திட்டம் உள்ளதா? என எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பினார்.  

அதற்கு பதிலளித்து இருந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்பதால் 2019-20ம் நிதியாண்டு முதலே நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய எந்த திட்டமும் இப்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பண மதிப்பிழப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் 2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளும், 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளும் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது என்றார்.

மத்திய நிதியமைச்சரின் எழுத்து பூர்வமான இந்த பதில் மூலம், நாட்டில் 500 ரூபாய் நோட்டுகளை விட 2,000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கமே அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம்-களில் ரூ.2000 நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்த அவர், கடந்தகால பயன்பாடு, மக்களின் தேவை, நிகழ்கால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏடிஎம்களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றன" என்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது திடீரென 2 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொள்ள நினைத்திருப்பது அரசியல் ரீதியாகவும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com