சட்டப்பேரவையில் அமைச்சராக உதயநிதியின் முதல் பதில் இதுதான்!

சட்டப்பேரவையில்   அமைச்சராக உதயநிதியின் முதல் பதில் இதுதான்!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக சட்ட மன்றத்துக்குள் நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின் .

அதன் பிறகு 18 மாதங்கள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் கடந்த திங்கட் கிழமை (ஜனவரி 9ஆம் தேதி) ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, நாளை வெள்ளிக் கிழமை (ஜனவரி 13ஆம் தேதி) யுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்  இந்த கூட்டத் தொடரில்தான் முதன் முதலாக அமைச்சராக கலந்து கொண்டார். அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் அவருக்கு பத்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என்றும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

உறுப்பினரின் கேள்விக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பதில் அளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மேஜையை தட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

அமைச்சர் உதயநிதியின் பதில்...

"திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும்.

அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன.

கைப்பந்து ஆடுகளப் பணிகள், பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் ஆகியவற்றை ஏப்ரல் 2023-க்குள் முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று பதில் அளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

உறுப்பினர் எழுப்பி கேள்விக்கு மிகவும் துல்லியமாக பதில் அளித்துவிட்டு இருக்கையில் அமரும்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்களின் மகிழ்ச்சியை மீண்டும் வெளிப்படுத்தினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com