ஜப்பானிய முறையைப் பின்பற்றினால் தக்காளி விலை குறையும்! 

ஜப்பானிய முறையைப் பின்பற்றினால் தக்காளி விலை குறையும்! 

ந்த ஆண்டு எதிர்பாராத வகையில் இந்தியாவில் பருவ மழை அதிகமாக பெய்ததால் பல பயிர்கள் நாசமானது. இதில் தக்காளி குறிப்பிடத்தக்க சேதத்தை அடைந்ததால், அதன் வரத்து குறைந்து இந்தியா முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேலாகவே இருக்கிறது. இதனால், தக்காளி விலை எப்போது குறையும் என பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஒரு பொருளின் விலை திடீரென உயர்ந்தால் அதை ஜப்பானியர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

பொதுவாகவே ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை திடீரென உயரும் பட்சத்தில் அதை வாங்குவதை குறிப்பிட்ட காலம் வரை ஜப்பானியர்கள் நிறுத்தி விடுவார்களாம். எந்த பொருளாக இருந்தாலும் அதன் தேவை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படும். தேவை அதிகமாக இருந்து பொருள் குறைவாக இருந்தால் அதன் விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படும். இப்படிதான் தற்போது தக்காளி தேவையை விடவும் குறைவாக இருப்பதாலேயே விலை அதிகமாக விற்கப்படுகிறது. 

எனவே ஜப்பானியர்கள் போல ஒரு வாரத்திற்கு மக்கள் தக்காளி வாங்குவதை நிறுத்திக் கொண்டால், சந்தையில் தக்காளியின் தேவை குறைந்து விலையும் கணிசமான அளவு குறைக்கப்படும். சமீபத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் கூட இப்படி சொன்னதற்கு நாம் கிண்டல் செய்தோம். ஆனால் அவர் சொல்வது உண்மைதான். ஒரு வாரத்திற்கு நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. 

ஆனால் எல்லா விதமான பொருட்களும் விலை அதிகமாக இருந்து, வாங்குவதை நிறுத்தினால் விலை குறையும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட பொருளின் தேவை அவசியமாக கருதப்பட்டு அதற்கான மாற்றுப் பொருட்கள் இல்லை என்றால், எவ்வளவு விலை ஏறினாலும் மக்கள் அதை தொடர்ந்து வாங்கத்தான் செய்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மருந்து பொருட்களை சொல்லலாம். 

அதேபோல ஒருவருடைய வருமான நிலை, பிராண்ட் விசுவாசம், வாங்கும் பொருட்களின் மதிப்பு, விலை உயர்வின் காலம் போன்றவற்றின் அடிப்படையில் அந்தப் பொருளை தொடர்ந்து வாங்கலாமா வேண்டாமா என்பதை பொதுமக்கள் முடிவு செய்கிறார்கள். தற்போது தக்காளி விலை உயர்வின் காலம் குறுகியது என சொல்லப்பட்டாலும், மழை காரணமாக அதன் உற்பத்தி அதிகப்படியான பாதிப்புக்குள்ளானதால், மேலும் சில மாதங்களுக்கு அதன் விலை அதிகரித்தே காணப்படும் என சொல்லப்படுகிறது. 

வேண்டுமானால் தக்காளியின் பயன்பாட்டை வீடுகளில் குறைத்துக் கொண்டு, ஒரு வாரத்திற்கு அனைவருமே தக்காளி வாங்காமல் இருந்து பார்த்தால், அதன் விலை குறைகிறதா இல்லையா என்பது தெரிய வரும். இப்படிதான் ஆறு வருடங்களுக்கு முன்பு 2017 இல், ஜூலை 22 முதல் 30ஆம் தேதி வரை No Tomato Week என்கிற தலைப்பில், தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பதிவு ஒன்று பேஸ்புக்கில் போடப்பட்டது. அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com