சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், இதில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்களினால் நிச்சயம் வெற்றி பெறும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படி என்ன மாற்றங்கள் இதில் கொண்டு வரப்பட்டுள்ளது?
சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றிக் கொண்டிருப்பதால், சந்திரயான் மூன்றுக்கு ஆர்பிட்டர் தேவையில்லை. சந்திரயான் 2ன் ஆர்பிட்டரையே சந்திரயான் 3-க்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்த சந்திரயான் 3 விண்கலத்தில் லேண்டர், ரோயர் மட்டுமே பயணிக்கிறது. இத்துடன் கூடுதல் உந்து விசைக்காக ப்ரொபஷனல் மாடல் என்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரொபஷனல் மாடலின் உள்ளேதான் விக்ரம் லேண்டரும், பிரக்னியான் ரோவரும் இருக்கும்.
இவை அனைத்தும் உள்ளடங்கிய விண்கலம் தான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலமாக இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, 20 நாட்கள் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும். பின்னர் படிப்படியாக நிலவின் புவியீர்ப்பு விசைக்குள் கொண்டு செல்லப்பட்டு, நிலவையும் சில காலம் நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும். பின்னர் வருகிற ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி, ப்ரொபஷனல் மாடலிலிருந்து லாண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்கும். இது வெற்றிகரமாக முடிந்தால் லாண்டரில் உள்ளே இருக்கும் பிரக்னியான் ரோவர் வெளியே வந்து, தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். இதுதான் சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டமாகும்.
தற்போது இஸ்ரோவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், சந்திரயான் 2 தோல்வியிலிருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள்? அந்த தவறு சந்திரயான் 3ல் நடக்காமல் இருக்க என்ன மாற்றம் கொண்டுவரப் போகிறார்கள்? என்பதுதான்.
உண்மையிலேயே சந்திரயான் 2 தோல்வியிலிருந்து பல விஷயங்களை இஸ்ரோ கற்றுக்கொண்டு, சந்திராயன் மூன்றில் பல புதிய மாற்றங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக சந்திரயான் 2 லேண்டர் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தரையிறங்கும்படி உருவாக்கப் பட்டிருந்தது. ஆனால் சந்திரயான் 3 லேண்டெர் தரையிறங்க நிர்ணயம் செய்யப்பட்ட இடத்தில் ஏதாவது சரியில்லாமல் இருந்தாலும் வேறு இடத்தை மாற்றி தரையிறங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி வேறு ஏதாவது இடத்திற்கு சென்று தரையிறங்க வேண்டுமென்றால் அதற்குத் தேவைப்படும் கூடுதல் எரிபொருளும் ஆயத்தமாக நிரப்பப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட சற்று கூடுதல் வேகத்தில் லேண்டெர் சென்று தரையிறங்கினாலும், அதன் கால்கள் பழுதாகாதபடி உருவாக்கப்பட்டுள்ளது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதும் அதற்கான மின்சாரம் சோலார் பேனல்கள் மூலமே உருவாக்கப்படும். தற்போது இதில் சந்திரயான் 2ல் இருந்ததைவிட கூடுதலான சோலார் பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், Laser Doppler Velocimeter என்ற புதிய கருவி, வேகத்தையும் தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிட பொருத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை இருக்கும் சென்சார்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால், அதற்கு மாற்றாக இயங்கும் சென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு சந்திராயன் மூன்றில் பல விஷயங்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக தரையிறங்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் பல பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சரியாக நடந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டால், நிலவில் சாப்ட் லேண்டிங் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.