குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 41,621 பெண்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது இந்திய குற்றப்பதிவு காப்பகம். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்திக்கு குஜராத் மாநில அரசின் சார்பாக அம்மாநில காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்து இருக்கிறது.
இது சம்பந்தமாக குஜராத் காவல்துறை, 2016 - 2020ம் ஆண்டுகள் வரை குஜராத்தில் 41,621 பெண்கள் காணாமல் போனதாக இந்திய குற்றப்பதிவு காப்பகம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில், 39,497 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியேற, பெரும்பாலும் குடும்பத் தகராறு, காதல் மற்றும் தேர்வுகளில் தோல்வி போன்றவையே காரணங்களாக இருப்பதகாவும் அந்த காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், குஜராத் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பெண்களும், 2018ல் 9,246 பெண்களும், 2019ல் 9,268 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள் என்கின்றன தகவல்கள். 2020லும் இது 8,290 ஆக இருந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பேரவையில் அரசு சார்பில் அளித்த விளக்கம் ஒன்றில், கடந்த (2019 - 20) ஓராண்டில் மட்டும் அகமதாபாத், வதோதரா பகுதிகளிலிருந்து 4,722 பெண்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.