பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு துறைகளில் பணிபுரியும் காஷ்மீர் பண்டிட்டுகளை தாற்காலிகமாக ஜம்முவில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்ரும் ஆசாத் ஜனநாயக கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய அவர், வேலைவாய்ப்பைவிட உயிர் முக்கியமானது. எனவே அரசு, காஷ்மீர் பண்டிட்டுகளை ஜம்முவுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியதும் அவர்கள் மீண்டும் இங்கு வரலாம் என்றும் குறிப்பிட்டார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் காஷ்மீர் பண்டிட்டுகள், அரசு பணிக்கு வராமல் இருந்தால் அவர்களுக்கு ஊதியம் தரப்படமாட்டாது என்று கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியிருந்தார்.
பயங்கராவதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் எங்களால் பணிக்கு வர இயலவில்லை என்று கூறி புலம்பெயர் காஷ்மீர் பண்டிட்டுகள் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாடம் நடத்தி வருகின்றனர்.
“எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. நாங்கள் பணி செய்யும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், அரசு சொல்வதை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார் காஷ்மீர் பண்டிட் ஒருவர்.
"காஷ்மீரில் சிறுபான்மையினரான எங்களை பயங்கரவாத அமைப்புகள் குறிவைத்து கொன்று வருகின்றனர். எனவே எங்களை பாதுகாப்பான இடத்துக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும்" என்றார் காஷ்மீர் பண்டிட்டுகளில் ஒருவரான ரோஹித்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் அமைதியைக் குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மிரட்டி வருவதாக தேசிய புலனாய்வுக்குழு தனது குற்றப்பத்திரிக்கையில் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரில், குல்காமில், அடூரா கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்ததை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்தது.