அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறைக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்களின் பதிவு இருக்கையின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக் கிழமையும், அதற்கு மறுநாள் 12-ம் தேதி விஜய தசமி சனிக்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது. எனவே ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால், பொது மக்களுக்கு ஏற்றவாறு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இணையதளம் மூலமாக 80 சதவீதம் டிக்கெட் முன்பதிவும், டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாக 20 சதவீதம் டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
ஆகையால், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ரயில் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜூன் 12 ம் தேதியான இன்று காலை 8 மணியளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், அனந்தபுரி ஆகிய விரைவு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களிலே அதிக டிக்கெட்டிகள் முன்பதிவாகியுள்ளது.
அதிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு டிக்கெட் முடிவடைந்து காத்திருப்போர் பட்டியல் வரத் தொடங்கியுள்ளது. அதில் முக்கியமாக சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை அதற்குமுன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் மலைகோட்டை விரைவு ரயில், கோயம்புத்தூருக்கு செல்லும் நீலகிரி, சேரன் விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, அமர்ந்து செல்லும் வசதி கொண்ட ஆர்.ஏ.சி இடங்களுக்கு புக்கிங் நடைபெற்று வருகிறது.
இன்று மாலைக்குள் முக்கிய விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் முன்பதிவு முடிந்து விடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர் செல்லும் நபர்கள் தங்களின் இருக்கைகளை விரைவாக முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள்.