‘மூன்று கோயில்களையே காணோம்’ பொன்.மாணிக்கவேல் பரபரப்பு!

‘மூன்று கோயில்களையே காணோம்’ பொன்.மாணிக்கவேல் பரபரப்பு!

கோயில்களில் சுவாமி சிலைகள்தான் காணாமல் போய்விட்டதானச் செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோயில்களே காணாமல் போய்விட்ட தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் மூன்று கோயில்களைக் காணவில்லை என ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர், “விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 38 சோழர் கால கோயில்களை ஆய்வு செய்து வருகிறோம். முதலாவதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் ஆய்வை முடித்துள்ளோம்.

சுதந்திரம் பெற்றபோது இங்கு மூன்று சிவன் கோயில்களும் விஷ்ணு கோயிலும் இருந்தது. இவற்றில் தற்போது பக்த ஜனேஸ்வரர் என்று அழைக்கப்படும் ராஜ ஆதித்த ஈஸ்வரன் கோயில் மட்டுமே உள்ளது. திருநாவலூரில் எழுபது ஆண்டுகளுக்கு முன் பல்லவர் கால கவிநாரீஸ்வரன் கோயில் நலிவுற்ற நிலையில் அன்றாட வழிபாட்டில் இருந்தது. இக்கோயிலுக்கு எதிரே ஒரு பெரிய கருங்கல் பலகை, ஒரு படிமத்துடனும் மற்றும் கல்வெட்டுடன் இருந்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு 1,170 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கவிநாரீஸ்வரன் கோயிலில் இருந்த மூலவர் உள்பட உத்ஸவ மூர்த்திகள், கருவறை, கருவறை சுவர்கள், கருவறை அடித்தளம், விமானம் போன்றவை காலப்போக்கில் களவாடப்பட்டு தற்போது நிரந்தரமாக கோயிலே மறைந்து போனது.

திருமேற்றளி மகாவிஷ்ணு கோயில் எழுபது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு அதில் இருந்த மூலவ மூர்த்தியான திருமேற்றளி மகாவிஷ்ணு திருமேனி, அதன் ஐம்பொன் உத்ஸவ மூர்த்தி, கருவறை, கருவறை அடித்தளம், கல்வெட்டுகளும் கறைந்து போயின.

அதுபோல, ஏமப்பேரூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் திருபுவன சுந்தரர், திருபுவன சுந்தரி ஐம்பென் சிலைகள், எழுபது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. இந்த ஐம்பென் சிலைகள் சோழப் பேரரசன் ராஜராஜசோழ தேவரின் ஆணைப்படி பனைப்பாக்கம் ஊர் தலைவனான நந்திப்புத்தன் என்ற செம்பியன் மூவேந்தவேலான் என்பவர் இக்கோயிலுக்கு கொடையாகசக் கொடுத்துள்ளார்.

மேலும், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் இசை ஒலி எழுப்பும் தன்மை கொண்ட 1,072 ஆண்டுகள் பழைமையான நான்கு கல் தூண்களைக் காணவில்லை. இத்தூண்கள் புனரமைப்பு என்ற போர்வையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, உள்நாட்டு சிலை கடத்தல் குற்றவாளிகளிடம் கைமாறி உள்ளது.

திருநாவலூரில் இருந்த இந்த நான்கு கோயில்களும் முதலாம் பராந்தக தேவரின் காலத்தில் இருந்து தொடர்ந்து வழிபாட்டில் இருந்தது. ஆனால், இன்று ராஜ ஆதித்தேஸ்வரன் கோயில் மட்டுமே உள்ளது. மற்ற மூன்று கோயில்கள் காணாமல் போய்விட்டன. புனரமைப்பு என்ற பெயரில் மூலவர், உத்ஸவர் மூர்த்திகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருளாக இருந்து வருகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இன்றும் ஆயிரக்கணக்கான உலோக மற்றும் கற்சிலைகள் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டுபிடித்து மீட்க புலன் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூன்று எஸ்.பி.க்கள் கொண்ட குழுவிடம் வழக்கை ஒப்படைத்தால் மட்டுமே இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

தற்போதுள்ள சிலை திருட்டு தடுப்புத் துறையிடம் ஒப்படைப்பது சிறந்த செயலாகாது. கோயில் திருட்டு குற்றத் தகவல் மற்றும் சிலை திருட்டு குற்றத் தகவலை போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய 60 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே. அதேபோல், குற்றத் தகவலை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் பதிவு செய்யாமல், அந்தத் தகவலை மற்றொரு காவல் பிரிவுக்கு மாற்றுவதும் தமிழகத்தில் மட்டுமே. மேலும், தமிழகத்தில் மூன்று லட்சம் சிலைகள் கோயில்களில் பாதுகாப்பின்றி உள்ளன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com