தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பெரும்பாலான அலுவலகங்களில் நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமான வரித்துறைக்கு முறையாக சமர்ப்பிப்பதில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக, முப்பது லட்ச ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட பத்திரப்பதிவுகளுக்கு முறையாகக் கணக்குக் காட்ட வேண்டும். ஆனால், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமலேயே பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, பெருந்தொகை பணப்பரிவர்த்தனை நிலப் பத்திரப் பதிவுகளில் நிலத்தின் மதிப்பை குறைத்துக் காண்பித்து பத்திரப் பதிவு செய்யப்படுவதாகவும், அது சம்பந்தமாக நிதி பரிவர்த்தனை அறிக்கையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் முறையாகக் கணக்குக் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து முறையாகக் கணக்குக் காட்டாத சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை மற்றும் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது, மூவாயிரம் கோடி ரூபாய்க்குக் கணக்குக் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி, சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரித்துறைக்குக் கணக்குக் காட்டப்படவில்லை என்றும் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்குக் காட்டப்படவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து இந்த இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதால், இதுபோன்று வருமான வரித்துறைக்குக் கணக்கில் காட்டாத இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.