கியூஆர் கோடு மூலம் பயணச்சீட்டு... கோவை தனியார் பேருந்தில் அறிமுகம்.

கியூஆர்  கோடு மூலம் பயணச்சீட்டு... கோவை தனியார் பேருந்தில் அறிமுகம்.
Published on

விளம்பரத்தில் வருவதுபோல் பஜ்ஜி வாங்கினாலும் நகை வாங்கினாலும் பணம் செலுத்தக் காத்திருக்காமல் கியூஆர்  கோடு மூலம் ஸ்கேன் செய்து வேண்டிய பணத்தை செலுத்தி விட்டு விரைவாகத் திரும்பலாம். நம்மைச்சுற்றி உள்ள அனைத்துமே ஆன்லைன் ஆகிவிட்ட நேரத்தில் இனி பேருந்தில் பயணச்சீட்டும் ஆன்லைனில் செலுத்தும் வசதியை கோவையில் உள்ள தனியார் பேருந்து அறிமுகம் செய்துள்ளது.

சமீபமாக  சில்லறை காசு தட்டுப்பாடு அதிகமாகி விட்டதால் சில்லறை பிரச்சினையை தீர்க்க பணம் இல்லா பரிவர்த்தனைகளை வணிக வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  போன் பே, கூகுள் பே, பேடிஎம் என தள்ளுவண்டி பிளாட்பார கடைகள், தங்க நகை கடைகள், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் என பரவலாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடக்கிறது. தற்போது இந்த பரிவர்த்தனையை ஒரு தனியார் பேருந்து  நிறுவனமும் கையில் எடுத்துள்ளது.

குறிப்பாக பேருந்துகளில்  அடிக்கடி நடக்கும்  சில்லறை பிரச்சினைகளால் பயணிகள் நடத்துனர்களிடையே வாக்குவாதமும் முற்றி, அடிதடி வரை போகும்.   சரியான சில்லறை வாங்க முடியாத நிலையில் நடத்துனர்களும் . சில்லறை தர முடியாமல் பயணிகளும்  தவிக்கின்றனர். இதைத் தவிர்க்க கோவையில் முதல் முறையாக தனியார் நிறுவன பேருந்துகளில்  கியூஆர்  கோடு மூலம் பணம் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தனியார் பஸ் நிறுவனம் சார்பில் வடவள்ளி –ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்- வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரனந்தம்- செல்வபுரம், மதுக்கரை -ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஐந்து பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகள் பயணச்சீட்டு  எடுக்க கியூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு அதில் பணம் செலுத்தலாம்.

இது குறித்து குறிப்பிட்ட தனியார் பேருந்து நிறுவனத்தினர் “நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை விட உள்ளுர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ் எனப்படும் பேருந்துகளில் அதிக அளவில் சில்லறை பிரச்சினை உள்ளது. இதனை போக்க யோசித்தபோதுதான் கடைகளில் பணம் செலுத்துவதற்கு கியூஆர்  கோடு வசதி உள்ளதுபோல் பேருந்திலும்  அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனவே எங்கள் நிறுவனத்தின் ஐந்து பேருந்துகளிலும் கியூஆர்  கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பி தர வசதி செய்யப்பட்டது. இதற்கான குறுஞ்செய்தி நடத்துனர் அலைபேசிக்கு செல்வது போல இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் குறுந்தகவலை நடத்துனரிடம் காட்டி பயணச்சீட்டு பெற்றுக்  கொள்ளலாம் இதன் மூலம் சில்லறை பிரச்சினை வெகுவாக குறைந்துள்ளது என்றனர்.

இந்த தகவல் வலைத்தளங்களில் பரவி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது . இந்த வசதி இனி அடுத்தடுத்து பேருந்துகளில் ஏற்படுத்தும்போது சில்லரைப் பிரச்சினைகள் இல்லாமலே போகும் காலமும் வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com