
மதுரையில் ரூ.600 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக டைடல் பார்க் அமைக்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ‘பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேசியதாவது:
மாநிலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அந்த வகையில் சிறு குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, இன்று தொழில் வளர்ப்பிலும் முன்னணியில் உள்ளது. மதுரையில் இயங்கி வரும் 50,000 குறு சிறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை, இந்த பொருட்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதால் தொழில் நிறுவனங்கள் இதை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.
மதுரையில் விரைவில் தகவல் தொழில் நுட்ப டைடல் பூங்கா அமைக்கப்படும். இதனை டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கரில் 2 கட்டங்களாக 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா கட்டப்படும். இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
-இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.