
புலி நக ஆயுதத்தில் என்ன சிறப்பு?
இது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிறப்பான ஆயுதமாகும். மராட்டியத்தை ஆட்சி செய்த மன்னர் சத்ரபதி சிவாஜி, அப்சல்கானைக் கொல்ல பயன்படுத்திய புலி நக ஆயுதம் மிகவும் புகழ்பெற்றது. பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கிராண்ட் டப் என்பவருக்கு சிவாஜியின் சந்ததியினரின் வசமிருந்த ஆயுதம் வழங்கப்பட்டது. ஜேம்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரது வம்சாவளியினர் புலி நக ஆயுதத்தை லண்டன் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துவிட, பல ஆண்டுகளாக அங்குள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜியின் 350ஆவது ஆண்டு முடிசூட்டு விழா வரும் காரணம், புலி நகம் ஆயுதத்தை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கொண்டவர மகாராஷ்டிர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து அரசும், 3 ஆண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் மகாராஷ்டிர அரசிடம் வழங்கவிருக்கிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. இதை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மகாராஷ்டிர அரசு 11 பேர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தியுள்ளது.
புலி நகம் ஆயுதம் கொண்டு வரப்பட்ட பின்பு மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா; சதாராவில் உள்ள ஸ் ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜா அருங்காட்சியகம்; நாக்பூரிலுள்ள மத்திய அருங்காட்சியகம்; கோலாப்பூரிலிருக்கும் லட்சுமி விலாஸ் அரண்மனை ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்படுமென்றும், நவம்பர் மாதம் புலி நகம் ஆயுதம் வருமென்றும் மகாராஷ்டிர அரசின் கலாசார விவகாரத்துறை அறிவித்துள்ளது.
ராஜாவிற்கு ரூபாய் 5 கோடி வசூல்!
எந்த ராஜா? லால்பாத் ராஜா விநாயகர். மகாராஷ்டிராவில் கணேச சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறுமென்பது நாடறிந்த விஷயம். பிரபலமான மண்டல்களில் வரும்படி கோடியைத் தாண்டுகிறது.
90 ஆண்டுகள் பழைமையான லால்பாக்சா ராஜா மண்டல் கணபதிக்கு ஒவ்வொரு வருடமும், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக அளிப்பது வழக்கம். இந்த வருடம் 3 ½ கிலோ தங்கம், 64 கிலோ வெள்ளி ஆகியவைகளோடு ரொக்கமாக ` 5 கோடி கணபதி மண்டல் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
மேலும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த 110 பொருட்களை சமீபத்தில் ஏலம் விட்டனர். அதன் மூலம் ` 80.7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதை சமூக சேவைக்கும் மற்றைய நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்த இருப்பதாக மண்டல் தலைவர் கூறியுள்ளார். அதிகபட்சமாக 2008ஆம் ஆண்டு ` 11.5 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
பசை அட்டைக்குத் தடை!
மராட்டிய மாநிலத்தில் எலிகளைப் பிடிப்பதற்காக பசை அட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
எலிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் இந்த பசை அட்டைகள் மனிதாபிமானமற்ற செயலாக அரசு கருதுவதால், இனிமேல் இது போல பசை அட்டைகளையோ அல்லது வேறு வடிவத்திலோ தயாரிக்கவும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறதென மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதில் சிக்கும் எலிகள், பல்லிகள் மற்றும் சில சிறு உயிரினங்கள் தப்பிக்க முடியாமல் உயிரை விடுகின்றன. மேலும் இதை வீட்டுக் குப்பைகளுடன் வெளியே போடுகையில் சில பறவைகள், அணில் ஆகியவைகளும் மாட்டுகின்றன.
மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவை, விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா பாராட்டியுள்ளது.