புலி வருது...புலி வருது... விலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை!

புலி வருது...புலி வருது... விலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை!
Published on

உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகம். உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் இந்திய வனப்பகுதிகளில்தான் சுற்றித்திரிகின்றன. ஆண்டுக்கு ஆண்டு புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், உண்மைநிலை என்னவென்றால் புலிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவை வசித்து வரும் நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மிகவும் கவலை அளிக்கும் இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் வனப்பகுதியில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு புலி ஒன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்லும் விடியோ ஒன்று வைரலாகி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. வனப்பகுதிகளுக்கு நடுவே உள்ள சாலைப்பகுதியில் லாரிகளும், இதர கனரக வாகனங்கும், கார்களும் சென்ற வண்ணம் இருக்க, ஒரு புலி நிதானமாக வாகனப்போக்குவரத்து இல்லாத சமயமாக பார்த்து சாலையைக் கடந்து செல்கிறது.

இந்த விடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் வெளியிட்டுள்ளார். இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. “வளர்ச்சி நமது வனவிலங்குகளை எந்த அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது பாருங்கள்” என்று அந்த விடியோவில் அவர் விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

வனவிலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். டி.வி. நடிகை ரூபா கங்குலி, வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் இந்த வளர்ச்சி தேவைதானா என கேட்டுள்ளார்.

வனவிலங்குகளுக்கான இடத்தை நாம் கைப்பற்றிவிட்டோம். ஆனால், அவை வாழ்வதற்கு இடமில்லை என்று ஒருவர் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால், வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், “இந்த இடத்தில்தான் வனவிலங்குகள் கடந்து செல்ல பாலம் கட்ட இருக்கிறோம். எனவே நல்லதையே நினையுங்கள்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நபர், வனவிலங்குகள் வசிப்பதற்கு இடம் இல்லாத நிலையில் நான்கு வழி, ஆறு வழிப் பாதைகள் தேவைதானா? என்று கேட்டுள்ளார்.

புலி நிதானமாக சாலையைக் கடப்பது, எச்சரிக்கை உணர்வா அல்லது மனிதர்களுக்கு பாடமா என்பது தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2,967. 2014 ஆம் ஆண்டு 2,226 ஆக இருந்தது 2,967 ஆக அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. புலிகள் எண்ணிக்கை 3,000 என அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com