
TikTok செயலியானது எப்போதுமே ஆபத்தான வைரல் வீடியோக்களுக்குப் புதியதல்ல. வைரலான பெனடிரைல் சேலஞ்சானது ஒரு அமெரிக்க இளைஞனின் உயிரைப் பறித்த பிறகு, அதேபோன்றதொரு புதிய சவால் அமெரிக்காவில் மற்றொரு 16 வயது சிறுவனை மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் விட்டுச் சென்றது. நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, வட கரோலினாவில் ஒரு டீனேஜர் தனது டிக்டாக் முயற்சி மூலமாக மிக மோசமான வகையில் தீக்காயத்திற்கு உட்பட்டுள்ளார். புதியதொரு வைரல் டிக்டாக் சவாலை முயற்சித்ததால் அவரது உடலில் கிட்டத்தட்ட 75% சருமப் பகுதியானது தீக்காயங்களால் பாதிப்படைந்துள்ளது.
அந்தப் புதிய டிக்டாக் சவாலானது ஒரு லைட்டர் மற்றும் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக ஊதுபத்தியை உருவாக்குகிறது. கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், மேசன் டார்க் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த டிக்டாக் சேலஞ்சை முயற்சித்தபோது, அவர் வைத்திருந்த ஸ்ப்ரே பெயிண்ட் கேன் ஒரு பெரிய சத்தத்துடன் வெடித்து, அந்த இளைஞனை தீயில் எரித்தது.
தீக்காயங்களைத் தணிக்க, மேசன் அருகிலுள்ள ஆற்றில் குதித்தார், ஆனாலும் கூட தீயின் தீவிரத்திலிருந்து தப்ப முடியாது கருகிய தோலுடன் வெளிப்பட்டார். சிகிச்சைக்காக உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தற்போது 75% தீக்காயங்களுடன் UNC பர்ன் சென்டரில் இருக்கிறார், சிகிச்சை முடிய குறைந்தது ஆறு மாதங்கள் அங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 26 அன்று, மேசன் தனது நீண்ட குணப்படுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முதல்படியாக தோல் ஒட்டுதல்களைப் பெறும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
நடந்து விட்ட விபத்தில் தன் மகன் முதுகில் டி வடிவில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து அவரை மீட்க அனைவரது பிரார்த்தனையையும் தாங்கள் நம்பி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் ஹோலி டார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகனைப் பற்றிக் குறிப்பிடும் போது ''தீக்காயத்தினால் தனது மகன் அடையாளம் தெரியாதவனாக மாறி விட்டிருப்பதாக அவரது தாய் குறிப்பிட்டிருந்தார்..
சிறுவனின் பாட்டியும் அவன் சார்பாக GoFundMe என்றொரு இணைய தளப் பக்கத்தை அமைத்திருக்கிறார்.
அவரது தாயாரின் குறிப்பில், ''என் மகன் மேசன் குணமடைய உங்களது பிரார்த்தனைகள் தேவை. அவரது உடலில் 75% எரிந்துள்ளது. இந்த விபத்து ஏப்ரல்
23, 2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. தீயை அணைக்க அவர் ஆற்றில் குதித்தார். 2வது மற்றும் 3வது டிகிரி தீக்காயங்கள் ஏற்பட்டதால், நதி நீரிலிருந்து தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். சேப்பல் ஹில்லில் உள்ள UNC தீப்புண் சிகிச்சை மையத்தில் இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது தேசத்தின் முதன்மையான ஒன்றாகும். மேசன் அவருக்கு முன்னால் ஒரு நீண்ட பாதை உள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நம்பமுடியாத அளவு வலியில் இருக்கிறார், வலி காரணமாக தற்போது மயக்கமடைந்துள்ளார்." - என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், வைரலான TikTok ட்ரெண்டிற்கு முயற்சித்தபோது, மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இறந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடக தளமான TikTok இல் 'Benadryl Challenge' இன் ஒரு பகுதியாக பெனாட்ரில் என்ற ஆண்டிஹிஸ்டமைனின் 12 முதல் 14 மாத்திரைகளை உட்கொண்ட இளம்பெண் இறந்தார்.