143 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்.


143 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்.

தினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாள், லண்டனில் 143 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. 2003 ஆம் ஆண்டு விஜய் மல்லையாவால் ஏலம் எடுக்கப்பட்ட இந்த வாள் மீண்டும் வேறொருவரால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவை ஆண்ட அரசர்களில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்களில் ஒருவர் திப்பு சுல்தான். மைசூர் நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த திப்புசுல்தானின் தலைநகராக, ஸ்ரீரங்கப்பட்டினம் திகழ்ந்தது. அந்த நகரத்தை 1799 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி படைகள் வீழ்த்தின. அதன் அடையாளமாக மேஜர் ஜெனரல் 'டேவிட் போர்ட்' என்பவரிடம்  திப்பு சுல்தானின் வாள் வழங்கப்பட்டது. 

இதற்கு முன்னர் திப்பு சுல்தான் படையிடம் சிக்கி, மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த போர்ட், மீண்டும் தனது படையைத் திரட்டி வந்து திப்பு சுல்தானைத் தோற்கடித்ததால் இந்த வெற்றி அப்போது பெரிதும் கொண்டாடப்பட்டது. அதனால்தான் தற்போது வரை போர்ட் குடும்பத்தின் அடையாளக் குறியீட்டில் திப்பு சுல்தானை வீழ்த்தியதன் அடையாளமாக, மைசூர் புலியின் சின்னம் இடம்பெற்றிருந்தது. மிகவும் மதிப்புமிக்க இந்த வாள், சுமார் 200 ஆண்டுகளாக போர்டின் லண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த 2003ஆம் ஆண்டு அதனை அந்தக் குடும்பத்தினர் ஏலத்திற்கு வழங்கினர். 

2003 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான விஜய் மல்லையா இந்த வாலை ஏலத்தில் எடுத்தார். அப்போது ஜனதா கட்சியிலிருந்த மல்லையா, சில மாதங்களில் நடைபெறவிருந்த கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த வாளை வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மீண்டும் இந்த வாள் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்போது மல்லையாவால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த வாள் மீண்டும் எப்படி ஏலத்திற்கு வந்தது? என வரலாற்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனை ஏலம் விட்டவர்கள் இதனை மல்லையா விடமிருந்து வாங்கியதாக எந்தத் தகவலும் வெளியிட வில்லை. தற்போது 143 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த வாளும், மல்லையா வாங்கிய வாளும் வெவ்வேரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இந்த வாளை வாங்கியதில் இருந்துதான் தமக்குப் பிரச்சனை எழுந்ததாக கருதிய மல்லையா, கடந்த 2018 ஆம் ஆண்டு இதனை ஏலம் எடுத்த நிறுவனத்திடமே வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

எனவே தற்போது எழுந்துள்ள குழப்பத்தைத் தீர்க்க, இதுகுறித்து ஏல நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com