

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அக்கோவில் நிர்வாக பணிகள், பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானத் திட்ட செயல்பாடு மற்றும் கோவில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். குறிப்பாக, பக்தர்களுக்கு நாள் முழுவதும் வழங்கப்படும் அன்னதானத் திட்டம் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது வரவேற்பு பெற்றது.
மேலும் திருச்சி மற்றும் சமயபுரம் அருகிலுள்ள கோவில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாதது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்தார். இப்படி அடுத்தடுத்து கோவில்களுக்கு தெரிவிக்காமல் சாதாரணமாக மக்களில் ஒருவராக சென்று அதிரடி ஆய்வு நடத்தும் அமைச்சருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் இவர் ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலையில் சாதாரண உடையில் முகக் கவசம் அணிந்து கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார் அமைச்சர் ரமேஷ் . வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல் அவரிடம் விஐபி தரிசனத்திற்கு பேரம் பேசியுள்ளனர் அங்கிருந்த அர்ச்சகர்கள்.
விஐபி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவர்கள் கேட்ட 4,000 ரூபாயை ஜிபே மூலம் செலுத்தினார் அமைச்சர். பணத்தை அனுப்பி விட்டு பிறகே தான் அமைச்சர் என அவர்களிடம் அறிமுகப்படுத்திய ரமேஷ் வசூல் செய்த அர்ச்சகருடன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து தற்போது விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்தர்களுக்கான தரிசனத்திற்காக ரூபாய் 10 கட்டணமும் சிறப்பு தரிசனம் என்று ரூபாய் 100 வசூலைக்கப்படும் நிலையில் இது போன்று அதிக கட்டணம் வசூல் முறைகள் குறித்து பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் முறைகேடுகள் தரிசன கட்டண முறைகேடுகள் புகார்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது அமைச்சர் ரமேஷ் நேரடியாக சென்று அதை உறுதி செய்த விதம் பாராட்டுக்குரியது.. இந்த அதிரடி ஆய்வு கட்டண வசூலைத் தடுக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.