திருப்பம் தரும் திருப்பதி ஏழுமலையான்.. கடந்த 5 ஆண்டுகளில் கோயிலுக்கு இத்தனை கோடி வருமானமா?

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை உலக பணக்கார கடவுள் என்றே சொல்வார்கள். அப்படி அவரது காலடியில் பணம் கொட்டி கொண்டே தான் இருக்கும். அவரை தரிசிப்பவர்களின் வீடுகளிலும் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் கூட்டம் இல்லாத நாளே இல்லை. மாதம் தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இவர்கள் காணிக்கையாக மட்டுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலுத்துகின்றனர்.

பலர் இலவச தரிசனம் மேற்கொண்டாலும், ஏராளமானோர் சிறப்பு தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஏனென்றால் இலவச தரிசனத்தில் பெருமாளை தரிசிக்க ஒரு நாள் ஆகிறது. இதனால் நேரத்தை விரயம் செய்யாமல் பலரும் சிறப்பு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.

இந்து தர்ம பிரச்சாரம், நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டுவது, நலிவடைந்த கோவில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது ஆகியவற்றிற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கியது. அப்போதிலிருந்து தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், 2019 ஆம் ஆண்டு 19,737 பக்தர்கள் 26 கோடியே 25 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினர். 2020 ஆம் ஆண்டு 49,282 பக்தர்கள் 70 கோடியே 21 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி இருந்தனர். 2021 ஆம் ஆண்டு 31,000 பக்தர்கள் 176 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர். 2022 ஆம் ஆண்டு 70 ஆயிரம் பக்தர்கள் 282 கோடியே 64 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி இருந்தனர். 2023 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 58 ஆயிரம் பக்தர்கள் 268 கோடியே 35 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

இதன் மூலம் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 970 கோடி ரூபாய் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக கிடைத்துள்ளது. 970 கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் தேவஸ்தானத்திற்கு சுமார் 30 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைத்துள்ளது. பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு வழங்கிய நன்கொடையை பயன்படுத்தி தேவஸ்தான நிர்வாகம் பாழடைந்து போன 176 கோவில்களை புணர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்தி உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 273 கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. வருமானம் இல்லாத 501 கோவில்களுக்கு மாதம் 5000 ரூபாய் என்று அடிப்படையில் தூப, தீப, நெய்வேத்திய செலவுகளுக்காக தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி செய்து வருகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com