

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று தவெக கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு காரணமாக தவெக வேட்பாளராக களம் இறங்கி தற்போது எம் எல் ஏ பொறுப்பை ஏற்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சரான பெரியகருப்பன் 2021ல் அதிமுக-வின் வேட்பாளருக்கு எதிராக திருப்பத்தூர் தொகுதியில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் தவெக வேட்பாளருடன் கடும் போட்டியைச் சந்தித்தார். இறுதிக்கு முந்தைய சுற்றுவரை வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 30 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்த அவர் இறுதிச் சுற்றுக்குப் பிறகு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தவெக வேட்பாளர் சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த முடிவை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் பெரியகருப்பன் 83,364 வாக்குகளூம் தவெக வேட்பாளர் 83,365 வாக்குகளையும் பெற்றதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தின் காரணமாக வாக்குகள் மறு எண்ணிக்கை நடத்தப்பட்டபோதிலும் மனுதாரர் அந்த செயல்முறையைக் கேள்விக்குட்படுத்தி, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று வாதிட்டதுடன் தேர்தல் அதிகாரிகளுக்கான கையேட்டின்படி அந்த மறு சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய, அதன் காணொளிக் காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மே 13-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் மாநில சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது எதிராளியான தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சீனிவாச சேதுபதி பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை மே 10 அன்று சிறப்பு அமர்வை நடத்தி நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் விசாரணை செய்தனர்.
குறிப்பாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் முறையாக மறு எண்ணிக்கை செய்யப்படவில்லை என்றும், அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை எந்தவொரு சட்டமன்ற நடவடிக்கையிலும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரர் வாதிட்டிருந்ததால் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடத்தப்பட்டது.
தற்போது நியமன முதலமைச்சராக உள்ள சி. ஜோசப் விஜய், மே 13, 2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் என்ற நிபந்தனை உள்ள நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. .தவெக எம்எல்ஏ சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்கும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவும், அவையில் தவெக கட்சியின் பலத்தை ஓர் வாக்கு அளவுக்குக் குறைத்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மறு உத்தரவு வரும் வரை தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் வாக்களிப்பதற்கும், இதர நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் அதிரடி தடை விதித்துள்ளது. மேலும் தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுடன் இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைக்கால உத்தரவின் படி தமிழக சட்டமன்றத்தில் நடத்தப்படவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக சட்டமன்ற உறுப்பினரால் பங்கேற்க முடியாது என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவலாக உள்ளது. மேலும் இந்த வழக்கு யாருக்கு சாதகமானதாக அமையும் என்பதும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.