அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இந்த 2 நாட்களும் திருப்பதி ஏழுமலையான கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோயில் நடை சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்ததாவது;
இம்மாதம் 25-ம் தேதி சூரிய கிரகணமும் நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணமும் ஏற்படுவதால், இந்த 2 நாட்களுக்கு அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. கிரகணம் முடிந்த பிறகு கோயிலை தூய்மைபடுத்திய பிறகு பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
மேலும் வி.ஐ.பி. உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும் இவ்விரண்டு நாட்களில் நிறுத்தி வைக்கப்படும். தவிர கிரகண காலத்தில் சமைக்கக்கூடாது என்ற ஐதீகம் கடைபிடிக்கப் படுவதால் அந்த 2 நாட்களில் அன்னதானமும் நடைபெறாது.
இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அதற்கேற்றாற்போல் தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.