

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச காப்பீடு வழங்க தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும்.
குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இலவச காப்பீடு வழங்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக விபத்துகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், திருப்பதியில் முதன்முறையாக புதிய நடைமுறை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கவசமாக, இயற்கை மரணம் அல்லது மாரடைப்பு போன்ற காரணங்களால் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கும் (புதிய திட்டமாக) புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திருமலை மலைப்பாதைகள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் அல்லது திருப்பதி தேவஸ்தான எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கி மரணமடையும் பக்தர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்துகளில் சிக்கித் தீவிரக் காயம் அடைந்து உடல் ஊனமுற்றால் ரூ.5 லட்சம் வரையிலும், காயமடைந்து சாதாரண மருத்துவச் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 வரையிலும் மருத்துவ உதவி வழங்க இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இந்த காப்பீட்டு திட்டத்திற்காக பக்தர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் இதற்கான முழு பிரீமியம் தொகையான ரூ. 2.12 கோடியை தேவஸ்தான நிர்வாகமே எல்.ஐ.சி (LIC) நிறுவனத்திற்கு செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்கு எந்தவித நிதிச்சுமையும் இன்றி காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்கும்.
ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் மட்டுமின்றி, எவ்வித டோக்கனும் இல்லாமல் இலவச தரிசன வரிசையில் செல்லும் ஏழை எளிய பக்தர்கள் உட்பட அனைவருக்கும் இந்த காப்பீடு முற்றிலும் இலவசமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.