Farmers Grievance Meeting - Tirupattur
Farmers Grievance Meeting - Tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் - சொட்டுநீர் பாசன திட்டத்தில் முறைகேடு... விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கைகள் முன்வைப்பு!

Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜிடம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வருவாய் அலுவலர் நாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில்கள் வருமாறு:-

விவசாயி:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசன அமைக்க நிதி வழங்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற விவசாயிகளுக்கு இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக சொட்டு நீர் பாசன குழாய் அமைத்து கொடுக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் பெயரில் ஆவணங்களை பெற்று சொட்டு நீர் குழாய் அமைக்காமல், சொட்டுநீர் குழாய் அமைந்தது போன்று படம் பிடித்துக் கொண்டு மோசடி செய்கின்றனர்.

கலெக்டர்:-

மாவட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை. கடந்த ஆண்டுகளில் சொட்டுநீர் பாசனத்தில் பயனடைந்த விவசாயிகளின் தகவல்களையும்,  தற்போது சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள விவசாயிகள் விவரங்களையும் அதிகாரிகள் எனக்கு அளிக்க வேண்டும். இந்த திட்டத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

விவசாயி:-

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் தெரிவிப்பதுபோல், விவசாயிகளையும் சிறப்பிக்க வேண்டும்.

அதிகாரி:-

இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி:-

திம்மணாம்பேட்டை அருகே அலசந்தாபுரம் பகுதியில் பழுதான டிரான்ஸ்பார்மரை சீரமைக்க திம்மணாம்பேட்டை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் விவசாயிகள் அதிக அளவு இலவச மின்சாரம் பெறுகின்றீர்கள். ஆகையால் நீங்கள் பணம் வசூல் செய்து தந்தால் சீரமைப்பதாக கூறுகின்றனர்.

கலெக்டர்:-

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி:-

வாணியம்பாடி நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் பாலாற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் கலப்பதால் பாலாறு சீர்கேடு அடையும் நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே வாணியம்பாடி நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

அதிகாரி:-

நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி:-

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் பாரம்பரிய விதை நெல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

அதிகாரி:-

பாரம்பரிய விதை நெல்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயி:-

ஆம்பூர் மாரப்பட்ட கிராமத்தில், நெக்னாமலை காப்பு காட்டின் அடிவாரத்தில் வீரக்குழி கானாற்றின் குறுக்கே வெள்ள நீரை சேமிக்கும் வகையில் நீர் குட்டை அமைக்க வேண்டும். இதனால் அந்த பகுதியில் உள்ள மான், உடும்பு, தேவாங்கு,  காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நீர் தேடி வெளியே வந்து வாகனங்கள், ரெயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும்.

அதிகாரி:-

நீர்க்குட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி:-

விவசாயிகளுக்கு உர மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் 100 அடிக்கு சுனாமி எச்சரிக்கை… லட்சக்கணக்கில் உயிர்சேதம் ஆகும் என தகவல்!
Farmers Grievance Meeting - Tirupattur

அதிகாரி:-

கிராமப்புறங்களில் இதுதொடர்பாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதிக அளவு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி:-

வாணியம்பாடி உழவர் சந்தையில் மோட்டார்சைக்கிள், விளை பொருட்கள் அதிக அளவு திருட்டு போகிறது.

அதிகாரி:-

போலீசார் மூலம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி:-

கிரிசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே அங்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டும்.

அதிகாரி:-

விரைவில் காலியாக உள்ள செயலாளர் பணியிடம் நிரப்பப்படும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

logo
Kalki Online
kalkionline.com