அட்லாண்டிக் கடலில் கடந்த 111 வருடங்களுக்கு முன்பு மூழ்கி தற்போது உடைந்த நிலையில் உள்ள டைட்டானிக் கப்பலை காண 2 கோடி ரூபாய் கொடுத்து 5 சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஆர்எம்எஸ் மைட்டானிக் என்ற கப்பல் 1912ம் ஆண்டு ஏப்லல் 10ம் தேதி 2,224 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில், 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஏராளமான விலை உயர்ந்த தங்கம், வைரம், முத்துக்கள் மற்றும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்களும் டைட்டானிக் கப்பலுடன் மூழ்கியது.
இதனைத்தொடர்ந்து 1985ம் ஆண்டு டைட்டானிக் கப்பலை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கப்பலின் சிதைவுகள் அதன்பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து டைட்டானிக் கப்பலைச் சுற்றி பல ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் 3டி மாதிரிகள் வெளியானது வலைத்தளத்தில் வைரலானது.
மேலும், கடல் மட்டத்திற்கு கீழ் 3,800 மீட்டர் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் ஓசன் கேட் நிறுவனம் சார்பில் நீர்மூழ்கி கப்பல் மூலம் சுற்றுலா பயணிகள் டைட்டானிக் கப்பல் அமைந்திருக்கும் பகுதிக்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி டைட்டானிக் கப்பலை நீர்மூழ்கி கப்பல் மூலம் பார்வையிட சென்ற 5 பேர் கொண்ட குழுவினர் தற்போது மாயமாகியுள்ளனர். இவர்களை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 5 நபர்களால் 96 மணிநேரத்திற்கு உயிர்வாழ முடியும் என கூறப்படுகிறது.
நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கும் மேலாக மாயமான நீர்மூழ்கி கப்பல் தேடப்பட்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கப்பல் படையில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களில் 58 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வர தொழிலதிபரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங்கும் ஒருவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென காணாமல் போயிருப்பது அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.