உச்ச நீதிமன்றம் சென்ற மஹுவா மொய்த்ரா.. எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்!

mahua moitra
mahua moitraThe Week

ணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எம்.பி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா 2019ம் ஆண்டு நாடாளுமன்ற எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராக மொய்த்ரா கேள்விகளை எழுப்பினார்.

இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் விஜய் சோன்கர் 500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, திரிணமூல் எம்பிக்கள் பேசும்போது, “500 பக்க அறிக்கையை சில மணி நேரங்களில் படிக்க முடியாது. 3 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரினர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார்.

இதற்கு அவைத் தலைவர் பதிலளித்தபோது, "நெறிமுறைகள் குழுவின் விசாரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவுசெய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை" என்று தெரிவித்தார்.

சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மொய்த்ரா நிருபர்களிடம் கூறும்போது, “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. நெறிமுறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக அறிக்கை அளித்துள்ளது" என்றார். இந்நிலையில், தன்னுடைய எம்பி பதவி பறிப்பு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com