விளையாட்டுத் துறையில் புரட்சி: சென்னை செம்மஞ்சேரியில் ரூ.301 கோடியில் விளையாட்டு நகரம்..!

Global Sports City in Semmancheri
Global Sports City in SemmancheriSource: TOI
Published on

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக சென்னை செம்மஞ்சேரியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் ஒன்று அமைய இருக்கிறது.இதற்காக தமிழக அரசு 301 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசு அரசாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இது தென்னிந்தியாவில் உருவாகும் முதல் மிகப்பெரிய விளையாட்டு நகரமாக இருக்கும்.

இந்த விளையாட்டு நகரம் 112.12 ஏக்கர் பரப்பளவில், 301 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு விட்டது. நிலமும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க தமிழ்நாடு அரச, முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இந்த விளையாட்டு நகரம் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) அருகே அமைய இருக்கிறது.எனவே, சென்னை மக்கள் எளிதில் சென்றடையும் இடமாகவும் இது இருக்கும். இதற்கான பூர்வாங்கப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும் எனத்தெரிகிறது. மேலும், இந்த விளையாட்டு நகரத்திற்கு மெட்ரோ ரயில் இணைப்பு வசதியும் இருக்கும் என அறியப்படுகிறது.

இந்த விளையாட்டு நகரத்தில், கால்பந்து மைதானம், வில்வித்தை மைதானம், துப்பாக்கி சுடுதல் மையம், ரோலர் ஸ்கேட்டிங், தடகளம், நவீன செயற்கை இழை ஓடுதளம், நீச்சல் மற்றும் BMX போன்ற சர்வதேச விளையாட்டு வசதிகள், பல்வேறு உள்அரங்க விளையாட்டுகளை நடத்தும் வகையிலான பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஆகிய வசதிகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதில் முதல் கட்டமாக, நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை, பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்படும் எனவும் அறியப்படுகிறது.

இத்துடன், வீரர்கள் தங்கும் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கம், புல்வெளிகள், சாலைகள், மழைநீர் வடிகால் ஆகிய அனைத்தும் இங்கு உலகத் தரத்தில் இருக்கும். அதோடு, 13 மீட்டர் அகலமும் 1 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட படகு சவாரி வசதியும் அங்கு இடம்பெறும்.

இது மட்டுமின்றி, வெள்ள நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பும் வகையில் 4.1 கிலோமீட்டர் நீள மண் வடிகால் மற்றும் கான்க்ரீட் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(SDAT) மற்றும் நீர்வளத்துறை(WRD) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
IPL 2026: 10 அணிகள் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு பட்டியல்..!!
Global Sports City in Semmancheri

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com