
தமிழக அரசு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில், வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகை குறித்த பேச்சுக்கள் வெளியாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஒரு பிரம்மாண்டமான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை, வழக்கமான பரிசு பொருட்களுடன், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.5000 வரை ரொக்க பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட பொங்கல் பரிசு திட்டம், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த திட்டம், ஆளும் திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி, அவர்களின் ஆதரவை பெறுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில், மக்களின் கைகளில் அதிக பணம் புழங்குவது, மாநிலத்தின் பொருளாதார சுழற்சிக்கு ஊக்கமளிக்கும். வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள், எந்தவிதமான நிதி சுமையுமின்றி, பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த திட்டம் வழிவகுக்கும்.
இந்த மெகா பொங்கல் பரிசு திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ரூ.5000 வரை ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இது, பண்டிகை காலங்களில் மக்களின் பொருளாதார சூழலுக்கு அதிகம் உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ரொக்க பணத்துடன், பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு போன்ற அத்தியாவசிய பொருட்களும் அடங்கிய ஒரு முழுமையான பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் முன்கூட்டியே தொடங்கி, சரியான நேரத்தில் மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தேர்தலுக்கு மக்களை கவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.