
தமிழக மாணவர்கள் இடையே அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவித்து, அவர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது தான் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டமாகும்' (Chief Minister's Research Fellowship Programme).
2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், முனைவர் (Ph.D.) ஆய்வுகளை மேற்கொள்ளும் தகுதியான 180 மாணவர்களை தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கி, அவர்களின் ஆராய்ச்சி பயணத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
இதுதவிர கலை மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000ம், அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000ம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பத்தாரருக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பில் BC, MBC வகுப்பினருக்கு 33 ஆகவும், SC, ST பிரிவினருக்கு 35 ஆகவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள மாணவர்கள்`trb.tn.gov.in` என்ற அரசு இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பணத்திற்கு கஷ்டப்படாமல் தங்கள் ஆராய்ச்சியில் முழுகவனம் செலுத்த வழிவகை செய்வதால், தமிழக மாணவர்கள் மத்தியில் இந்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பிப்பவர்களில் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூன்று கட்டங்களாக கடுமையான தேர்வு செயல்முறைகளை நடத்தி வருகிறது.
* கணினி வழியில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு முறையில், பொது அறிவு, அளவுசார் திறன் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு சார்ந்து தேர்வு நடப்படும்.
* முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக, பகுப்பாய்வு திறன் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த அறிவை சோதிக்கும் வகையில் விரிவான எழுத்து தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.
* இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் கடைசியாக அறிவுசார் திறன்கள் மற்றும் தமிழ் மொழி ஆளுமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையில் நேர்காணல் நடத்தப்பட்டு, கடைசியாக இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் முழுபயனையும் அடைய வேண்டும் என்பதற்காகவே மூன்று கட்ட தேர்வு செயல்முறைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.