ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை: வெள்ளை அறிக்கை காட்டும் அதிர்ச்சி தகவல்..!

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை, முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இயலாமையை மறைக்கும் நாடகமென கடுமையாக விமர்சித்துள்ளார்.
minister marie wilson
minister marie wilsonimage credit-@bijoyghosh70
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை (ஜன்18-ம்தேதி) கூட இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நகர்வாக, மாநிலத்தின் தற்போதைய நிதிநிலைமை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தமிழ்நாட்டின் நிதி வருவாய் மற்றும் கடன் குறித்த தகவல்கள் வெளியானது.

முன்னதாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்த நிலையில் தற்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான தரவுகளை வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன், ‘நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியம். அந்தப் பாரம்பரியம் தொடரும். பிரச்சனை ஒருபோதும் நலத்திட்டங்களில் இல்லை. ஆனால், அவற்றை நீண்ட காலம் தாங்கி செல்லத் தேவையான வருவாய் ஆதாரத்தை உருவாக்காமல், புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில்தான் பிரச்சனை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களின் கடனான ரூ.3,18,176 கோடியையும் சேர்த்தால், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2021-ல் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன், ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநில அரசு தனது முதல் 60 ஆண்டுகளில் திரட்டிய மொத்தக் கடனை விட, கடந்த 2021-2025 காலகட்டத்தில் வாங்கிய கடன் அதிகம் என நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபர் மீதும் தலா ரூ.1,28,934 கடன் உள்ளது.

மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன் ரூ.10 லட்சம் கோடிக்கு, வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுவதக்கவும் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு 1 ரூபாய் புதிய மூலதனச் செலவிற்கும் 2.26 ரூபாய் புதிய கடன் பெறப்படுவதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : திவாலாகும் நிலையில் தமிழ்நாடு - தமிழக நிதிநிலை குறித்த பாஜக வெள்ளை அறிக்கை வெளியீடு..!
minister marie wilson

அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கு ரூ.70.61 செலவாகுவதாகவும், பயணச்சீட்டு மூலம் வெறும் ரூ.25.97 மட்டுமே வருமானமாக கிடைப்பதாகவும் தெரிவித்த அவர் இதன் மூலம் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அரசுக்கு ரூ.53.81 நட்டம் ஏற்படுவதாகவும் கூறினார்

செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள்தோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், 2011-12-ல் ரூ.8,761 கோடியாக இருந்த ஒட்டுமொத்த கடனளவு, 2020-21 நிதியாண்டில் 381% ஆக உயர்ந்து ரூ.42,143.69 கோடியாக அதிகரித்ததுடன், 2026ல் இந்த எண்ணிக்கை ரூ.72,667 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த இழப்பின் ஒரு பகுதியை, அரசால் வழங்கப்படும் டீசல் மற்றும் மாணவர்களுக்கான பேருந்து பயணச் சலுகைக்கான மானியங்களால் ஈடு செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலைகளில் அடிக்கடி ஏற்படும் விலை உயர்விற்கு இணக்கமான அளவில் கட்டண உயர்வு இல்லாததால், மாநில போக்குவரத்து நிறுவனங்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே அரசுப் பேருந்து கட்டணம் மிகக் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். உதாரணமாக, விரைவுப் பேருந்துகளில் 10 கி.மீ பயணிக்க ஆந்திராவில் ரூ.30, கேரளாவில் ரூ.20 வசூலிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் வெறும் ரூ.12 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

2018-ம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநில போக்குவரத்து நிறுவனங்களின் மூலதன சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் லாபம் தரும் வழித் தடங்களை தனியாருக்கு தாரை வார்க்காமல் அரசே இயக்கி வருவாயை ஈட்ட வேண்டும் எனவும் 2021ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை, முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இயலாமையை மறைக்கும் நாடகமென கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், ‘வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை. தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது.

ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல. எனினும், உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : மத்திய அரசின் வரிப்பகிர்வு ஏமாற்றம் அளிக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு..!
minister marie wilson

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை, முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினரிடம் இருந்து எத்தகைய பதில் விமர்சனங்கள் வரும் என்று அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com