அதிகரிக்கும் காய்கறி, மின்கட்டணம், பால் விலை - விலையை உயர்த்தும் ஹோட்டல்கள்!

அதிகரிக்கும் காய்கறி, மின்கட்டணம், பால் விலை - விலையை உயர்த்தும் ஹோட்டல்கள்!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காய்கறி விலை, 207 சதவீதம் உயர்ந்திருப்பதாக பிஸினெஸ் ஸ்டாண்டர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டெல்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் காய்கறி, அரிசி, எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வால் மாதந்தோறும் 84 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலைகளில் கடந்த ஓராண்டில் பெரிய மாற்றமில்லை. அதன் காரணமாகவே இதுவரை விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்தது. தற்போது பருவமழை தவறியதால் வட இந்திய மாநிலங்களில் காய்கறி மற்றும் உணவுப்பொருளின் விலை உயர்வு, ஹோட்டல்களிலும் எதிரொலித்திருக்கிறது.

சென்னையில் கிண்டி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஹோட்டல்களில் இட்லி, தோசை, பொங்கல், பூரி உள்ளிட்ட உணவு வகைகள் குறைந்தபட்சம் 5 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. காய்கறி மற்றும் அரிசி விலை உயர்வுதான் காரணம் என்கிறார்கள், ஹோட்டல் உரிமையாளர்கள்

தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் பால் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் மின்சாரக் கட்டணமும் உயர்ந்திருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

அரிசி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டதன் காரணமாக பாசுமதி போன்ற அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண வகை அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. தொடரும் விலை உயர்வால் ஹோட்டல் உணவுப்பொருட்களின் விலையும் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 15 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உணவுப்பொருட்களின் விலையை  அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து உயர வாய்ப்பிருக்கிறது. பெங்களூரைப் பொறுத்தவரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது  தென்னிந்தியா முழுவதும தொடர்வதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com