இமாச்சலப் பிரேதேச வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள் மீட்பு - அமர்நாத் பக்தர்கள் நிலை?

அமர்நாத் லிங்கம்
அமர்நாத் லிங்கம்

இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிய 12 கல்லூரி மாணவர்கள் தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்களின் நிலை பற்றி இதுவரை செய்திகள் எதுவுமில்லை.

இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் நிறைய பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையை தொடர்பு கொண்ட தமிழக அரசு, தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட காரணத்தால் மீட்பு பணிகளில் மந்தம் ஏற்பட்டிருந்தது.

சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்று இமாச்சல பிரதேச  அரசு உறுதி செய்திருப்பதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. நேற்று முதல் சாலைப் போக்குவரத்து சீராக தொடங்கி இருப்பதாகவும், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழ்நாட்டுப் பயணிகளால் சமவெளிக்கு வந்துவிடமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் நேற்றிரவு பத்திரமாக சண்டிகருக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும், அங்கிருந்து ஊருக்கு வந்த சேர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, தமிழ்நாட்டிலிருந்து சென்ற பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் அதில் சிக்கிக்கொண்டு பயணம் தடைபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த இரு தினங்களாக ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பல்டால் மார்க்கமாக அமர்நாத்திற்கு செல்லும் வழிப்பாதை மூடப்பட்டு இருந்தது. நேற்று முதல் சரி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானாலும், தமிழ்நாட்டு பயணிகளால் பயணத்தை தொடர முடியாத நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, தங்களை மீட்டு ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று வாட்ஸ்அப் வழியாக வீடியோ செய்திகள் வெளியாகியிருப்பதாகவும் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com