மகளிர் உரிமைத்தொகை பணிகள் காரணமாக, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இனி ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்ததுதான் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
தேசிய அளவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலில் இருக்கிறது. பல்வேறு வட மாநிலங்களில் இத்திட்டத்தில் இணைந்திருப்பதன் மூலமாக எந்த மாநிலத்தில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை இருந்து வருகிறது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக அமலில் இல்லை. ஐயாயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே இதன் மூலம் பலனைடைந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் காரணமாக ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. பயோ மெட்ரிக் கருவியை பயன்படுத்தி வெளியூர் குடும்ப அட்டைதாரர்களாக இருந்தாலும் முகவரி மாற்றாமல் இருந்தால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று வந்தார்கள். ஆனால், பயோ மெட்ரிக் கருவிகள் இல்லாத நிலையில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை அமல்படுத்தப்படும் வரை இதே நிலை நீடிக்கும் என்கிறார்கள். அதுவரை பழைய நடைமுறையின்படி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, கையெழுத்திட்டு பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். பயோமெட்ரிக் முறையினால் கள்ள சந்தையில் பொருடகள் விற்கப்படுவது குறைக்கப்பட்டது. இந்நிலையில் பழைய நடைமுறைக்கு திரும்புவதால் ரேஷன் பொருட்களை பதுக்குவது அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது