

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை தமிழக அரசு நடத்த உள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 45 வகையான தொழில்நுட்பப் பதவிகளில் காலியாக உள்ள 461 இடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.05.2026 முதல் 25.06.2026 வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
இம்முறை தேர்வர்களின் வசதிக்காக ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கட்டணத்தை வழக்கமான நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் தவிர்த்து, கூகுள் பே, போன்பே, போன்ற UPI முறைகளைப் பயன்படுத்தியும் மிக எளிதாகச் செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இது நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என்பதால், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர், நேர்காணல் கிடையாது.
இத்தேர்விற்கான விரிவான பாடத்திட்டங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.