
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவை வீழ்த்த வேண்டுமானால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார். இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியில் மாயாவதி இடம்பெறாமல் பா.ஜ.க.வை வீழ்த்துவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்களில் பகுஜன்சாமாஜ கட்சியின் தலைவர் மாயாவதியும் ஒருவர். 22 சதவீத வாக்குகளை அவர் கையில் வைத்திருக்கிறார். அவரை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பது எனது கருத்தாகும் என்றும் கிருஷ்ணம் குறிப்பிட்டார்.
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இடம்பெறவேண்டும். அவரது கட்சி இடம்பெறாத நிலையில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியை மெகா கூட்டணி என்று கூறிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டுமானால் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோகதளம் ஆகிய கட்சிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற வேண்டும். அவரையும் கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறேன் என்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்.
எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் மாயாவதியும் அவரது கட்சியும் இல்லையென்றால் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாது. பா.ஜ.க.வை வீழ்த்துவதும் இயலாத காரியமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் லக்னெள தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனாலும் எதிர்த்து போட்டியிட்ட பா.ஜக. வேட்பாளர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.