இலங்கையில் திருப்பதி கோயில் அமைக்க - ஆந்திர முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை!

இலங்கையில் திருப்பதி கோயில் அமைக்க - ஆந்திர முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை!

லங்கையிலும் திருமலை திருப்பதி கோயிலை அமைத்துத்தருமாறு அந்நாட்டின் ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனிடம் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருப்பவர், செந்தில் தொண்டமான். இவர், இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் கட்சியின் தலைவரும்கூட. இலங்கையின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர், அண்மையில் அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான செந்தில் தொண்டமான், அடிக்கடி இந்தியாவுக்கு வந்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து தொடர்பாக இவர் பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு செந்தில் தொண்டமான் தலைமையில் அந்நாட்டு அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அம்மாநில வர்த்தக சபை பிரதிநிதிகளையும் அரசு உயர் அதிகாரிகளையும் இலங்கைக் குழுவினர் சந்தித்துப் பேசினர். விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலில் இலங்கைக் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், இங்குள்ள முகாம் அலுவலகத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகனை, செந்தில் தொண்டமான் குழுவினர் சந்தித்தனர். தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை உயராணையர் வெங்கடேஸ்வரனும் இதில் கலந்துகொண்டார்.

அப்போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயம், தொழிற்சாலைகள், சுற்றுலா துறைகளில் ஆந்திர அரசின் ஒத்துழைப்பை அவர்கள் கோரினர். விவசாயத்தில் குறிப்பாக, கரும்பு, மிளகாய் விவசாயத்தில் ஆந்திர மாநிலத்தின் உதவியையும் ஒத்துழைப்பையும் தாங்கள் நாடுவதாக அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். உணவு பதப்படுத்தல், மீன்வளர்ப்பு தொழில்களில் ஆந்திர முதலீடுகளை வரவேற்பதாகவும் அவர்கள் கூறினர். ஆந்திர முதலீட்டாளர்களின் தொழில் முனைவுகளுக்கு வசதியாக, குத்தகை அடிப்படையில் நிலமும் பிற வர்த்தக நடைமுறைகளை எளிதாக வழங்கவும் கிழக்கு மாகாண அரசு தயாராக இருக்கிறது என்றும் இலங்கைக் குழுவினர் உறுதியளித்தனர்.

மேலும், இலங்கையின் பல பகுதிகளிலிருந்து திருப்பதி திருமலை கோயிலுக்கு பக்தர்கள் வருவதைப் பற்றி ஜெகன் மோகனிடம் விவரித்த அக்குழுவினர், பக்தர்களின் முக்கியமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.கிழக்கு இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் ஆந்திர முதலீட்டாளர்களின் முதலீடுசெய்யும்படியும் ஆடைகள் பூங்கா அமைக்கவும் செந்தில் தொண்டமான கேட்டுக்கொண்டார்.

இந்தியாவுக்கு வரும் பக்தர்களில் பாதி பேர் திருப்பதி கோயிலுக்கு வரும் நிலையில், முதுமை காரணமாக ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்துசெல்ல முடியவில்லை என்றும் எனவே, அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி கோயில் ஒன்றை அமைத்துத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சாதகமான பதிலை ஜெகன் மோகன் வழங்கியதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com