இன்று சர்வதேச தாலசீமியா தினம்!

இன்று சர்வதேச தாலசீமியா தினம்!

தாலசீமியா என்பது மரபணுரீதியான ரத்த குறைபாட்டு நோய் ஆகும்.தங்களது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் இந்த நோயை பெறுகிறார்கள். உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இந்த நோயுடன் போராடுகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரத்தம் ஏற்ற வேண்டும். இரும்புச்சத்து உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

ரத்தத்தில் சிவப்பணுக்கள் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கும் பொறுப்பேற்கின்றன. இவற்றில் தாலசீமியா நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தே காணப்படும் என்பதால் அவர்களது ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளை குறைந்து உடல் உள்ளுறுப்புகளுக்கு கடத்தப்படும் ஆக்ஸிஜனின் அளவும் குறைகிறது . இதன் காரணமாக இவர்கள் ரத்த சோகை குறைபாடு மட்டுமல்ல இதய நோய்களுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

பெற்றோரிடம் இருந்து தான் குழந்தைகள் 50% மரபணுக்களைப் பெறுகின்றனர். அப்படிக் கிடைக்கும் மரபணுக்கள் பிறவிக் குறைபாடுகளுடன் அமைந்து விட்டால் தாலசீமியா எளிதில் குழந்தைகளின் உடல்நலனில் பாதிப்பைத் தரத் தொடங்கி விடுகிறது.

தாலசீமியாவில் இரண்டு வகை இருக்கிறது என்கிறார்கள்.

ஒன்று தாலசீமியா மேஜர், இரண்டாவது தாலசீமியா மைனர்.

தாலசீமியா மைனர் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு குறைவென்றாலும் தொடர்ந்து உடல்நலக் கண்காணிப்பும், உணவுக் கட்டுப்பாடும் குழந்தைகளுக்கு அவசியமே!

தாலசீமியா மேஜர் என்பது சரியான கவனிப்பு இல்லையென்றாலோ அல்லது நோய் குறித்த தேவையான புரிதல் இல்லையென்றாலோ உயிரிழப்பு வரை கொண்டு செல்லக்கூடிய வகையில் மிகவும் அச்சமூட்டக் கூடிய அளவிலான பாதிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள்.

நோய் அறிகுறிகள்:

இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு அறிகுறி உண்டாகும். சில குழந்தைகள் பிறந்ததும் இறந்துவிடக்கூடும். சில குழந்தைகளுக்கு இதயக்கோளாறு உண்டாகும். சில குழந்தைகளுக்கு வயிற்று வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு இருக்கும். சிலர் அடர்த்தியான சிறுநீர், பித்தப்பை கல் பிரச்னைகளும் வரலாம்.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்போதும் உடல் சோர்வுடன் இருப்பார்கள். மூச்சடைப்பு, அதிகப்படியாக வெளிறிய நிற்தில் தோல் இருக்கும். அதனால் ரத்த சோகை கடுமையாக இருக்கும்.

தாலசீமியா மேஜராக இருந்தால் குழந்தைக்கு ரத்த சோகை, மண்ணீரல் கல்லீரலில் வீக்கம், எலும்பு மஜ்ஜை குறைபாடு போன்றவை உண்டாகும்.

பிறக்கும் குழந்தைக்கு தாலசீமியா அறிகுறிகள் இருந்தால் முழு ரத்த பரிசோதனை, சிவப்பணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் சோதனை உள்ளிட்ட எலெக்ட்ரோபெரோசிஸ் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

பிறகு குழந்தையின் உடல் நலனைப் பொறுத்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ரத்தம் ஏற்ற வேண்டும். ரத்தம் ஏற்றுவதால் குழந்தைக்கு இரும்புச்சத்து அளவு அதிகரிக்கும் . உடலில் அளவுக்கதிகமான இரும்புச்சத்தும் இருக்கக்கூடாது என்பதால் இவை அதிகமாகாமல் இருக்க அதற்கு தகுந்த மாத்திரைகளை தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். குழந்தை வளர வளர உடல் எடைக்கேற்ப ரத்தம் ஏற்றுவதும், மருந்தின் அளவும் அதிகரிக்கும். வாழ்நாள் முழுவதும் ரத்தமும் மாத்திரைகளும் மட்டுமே அவர்களை கட்டுக்குள் வைக்கும்.

ரத்தம் உடலில் இருக்கும் வரை அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ரத்தம் குறைய குறைய உடல் சோர்வை உணர்வார்கள். பிறகு மீண்டும் ரத்தம் ஏற்ற வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக்கால பரிசோதனை மேற்கொள்ளும் போது தாலசீமியா கேரியர்கள் ரத்தத்தில் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்யும் போது குழந்தை தாலசீமீயா பிரச்சனைக்கு உட்பட்டிருந்தால் மருத்துவரே கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார்.

அத்தனை தூரத்திற்கு செல்வதற்கு முன்பு ஒரே ஒரு விஷயத்தை நாம் உறுதிசெய்து கொண்டால் உத்தமம் எனத் தோன்றுகிறது.

சொந்தத்தில் திருமணம் எனும் முட்டாள்தனத்தை இனியும் தொடராமல் இருந்தாலே போதும்.

பெருமளவில் தாலசீமியா குழந்தைகள் எண்ணிக்கைய குறைத்து விட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com