200 ரூபாயை தொட்ட தக்காளி: அடுத்த 2 மாதங்களுக்கு இதே நிலைதான்!

தக்காளி கொத்சு
தக்காளி கொத்சு

கடந்த இரண்டு வாரங்களாகவே நாடு முழுவதையும் அதிர்ச்சியில் வைத்திருக்கும் தக்காளியின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு தக்காளி விலை குறையப்போவதில்லை என்கிறார்கள்.

 டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு தக்காளி மற்றும் பிற காய்கறிகளில் விலை ஏறி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து கூடுதல் தக்காளியை வரவழைத்து, தக்காளியின் விலை அதிகமாக உள்ள இடங்களில் விநியோகிக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.வடமாநிலங்களில் தொடரும் மழையும், வெள்ளப்பெருக்கும் போக்குவரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளன. இதன் காரணமாக தக்காளியில் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

 தமிழ்நாட்டில் இன்று தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பெங்களூர், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் 150 ரூபாயை கடந்துவிட்டது. டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.  நாட்டிலேயே அதிகபட்ச விலையான 203 ரூபாய்க்கு பஞ்சாபில் விற்கப்படுகிறது.தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை 110 ரூபாயை கடந்துவிட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு விலை அதிகம் என்கிறார்கள். கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் தக்காளியின் விலை 40 ருபாயாக இருந்திருக்கிறது.

தக்காளி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களை மத்திய அரசின் சிவில் சப்ளை சம்பந்தப்பட்ட அமைப்புகள்  தொடர்பு கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையாவது போல் டெல்லியிலும் தக்காளி விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விலையை கட்டுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சக அதிகாரிகள் தக்காளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் ஏற்றத்தில் இருக்கும் அல்லது இதே நிலை நீடிக்கும் என்கிறார்கள்.மழைக்கால பாதிப்புகள் குறைந்து, உற்பத்தி அதிகமாகும்போது மட்டுமே தக்காளியின் விலை 40 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியாவிலும், மேற்கு மாநிலங்களிலும் தேவைக்கும் அதிகமாக தக்காளி உற்பத்தி இருந்து வருகிறது.

பருவமழை தொடர்வதற்கு முன்னர் கூடுதலாக கிடைத்துள்ள தக்காளியை, தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்க துரித நடவடிக்க எடுத்தாக வேண்டும். தக்காளி ஒரு அழுகும் பொருள் என்பதால் நீண்ட நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது என்கிறார்கள்.தக்காளி விலையின் ஏற்றத்தை தடுக்க முடியாது என்கிறார்கள், சந்தை  நிபுணர்கள். வெங்காயத்திற்கு முட்டை கோஸ் போல் தக்காளிக்கு மாற்றாக ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும். தக்காளி உற்பத்தில் என்பது சீசனை பொறுத்தது. மழையும் வெள்ளப்பெருக்கும் தொடரும் காலத்தில் தக்காளின் விலை ஏற்ற, இறக்கங்களை நிச்சயம் சந்திக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com