

நாளை, (ஜனவரி 27) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், வங்கி சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும் விடுமுறை நாளாக இருந்ததால், செவ்வாய் கிழமை வாடிக்கையாளர்களின் கூட்டம் வங்கியில் அதிகளவில் நிரம்ப இருந்தது. இந்நிலையில் நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நாளை வங்கிக்கு செல்ல ஏதேனும் திட்டமிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது, தேவையற்ற அலைச்சலில் இருந்து விடுபட வாய்ப்பாக இருக்கும்.
தற்போது நாடு முழுவதும் வங்கிகளுக்கு அனைத்து ஞாயிற்றுக் கிழமை, 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகின்றது. இது தவிர அனைத்து பொது விடுமுறைகளுக்கும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது.
வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை அமல்படுத்தக்கோரி நாளை ஒருநாள் நாடு தழுவி வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலைமுறை கோரிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இந்திய வங்கிகள் சங்கமும் சம்மதம் தெரிவித்தன. மத்திய அரசும் இந்திய வங்கிகள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆயினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அதிருப்தியடைந்த வங்கி ஊழியர்கள், நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி , எல்.ஐ.சி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் 5 நாள் வேலை முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இதில் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாக, வங்கி சங்கங்கள் கேள்வியை எழுப்புகின்றன. ஐக்கிய வங்கிகள் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள இந்த அழைப்பின்படி, பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தொடர் விடுமுறை 3 நாட்களுடன் சேர்த்து 4-வது நாளாக நாளையும் வங்கி மூடப்பட்டு இருந்தால், அது பொதுமக்களுக்கும், அவசர வங்கி தேவைப்படும் நபர்களுக்கும் கடும் பாதிப்பை கொடுக்கும். மேலும் அடுத்த நாள் வங்கி திறக்கப்பட்டாலும் அதிக வேலைப்பளு வங்கி ஊழியர்களுக்கும் ஏற்படும். வேலை நிறுத்தம் காரணமாக நேரடி பணப் பரிவர்த்தனைகள், செக் கிளியரன்ஸ் போன்றவை பாதிக்கும். ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் சேவையும் பாதிக்கும், இதனால், பல இடங்களில் ஏடிஎம்கள் சேவையும் பாதிப்படையும்.
வாழ்க்கையாளர்களுக்கான தீர்வு :
வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் சேவைகள் முடங்கினாலும்இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் சேவைகள் எந்த பாதிப்பும் அடையாது. பணப்பரிவர்த்தனைக்கான சேவை மையங்கள், இ சேவை மையங்கள் மூலம் டிஜிட்டல் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் பயன் பெறலாம்.
இது போன்ற சிக்கலான சூழல்கள் எதிர்காலத்தில் நடைபெற சாத்தியம் உண்டு என்பதால், அனைத்து வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் சேவைகளில் ரிஜிஸ்டர் செய்து வைத்திருப்பது நல்லது.