பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான நபருக்கு, கடந்த சில மாதங்களாக முகத்தில் வீக்கம் மற்றும் மங்கலான பார்வை இருந்தது. இந்த அறிகுறிகள் தீவிரமடைந்ததையடுத்து, அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில் (IGIMS) அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்ப பரிசோதனையின்போது, மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை அனைவரையும் திகைக்க வைத்தது. அந்த நபரின் இடது கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பில் ஒரு பல் இருந்தது. அந்தப் பல்லின் வேர்கள், கண்ணின் சுற்றுவட்டப் பகுதி (eye socket) வரை பரவியிருந்தன. இந்த அரிய மருத்துவ நிலை, "கண்ணில் பல்" என்று விவரிக்கப்பட்டது.
வாய்வழி மருத்துவம் மற்றும் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் நிம்மி சிங், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக ஒரு சிறப்பு அறுவை சிகிச்சை குழுவை அமைத்தார். இதில், மேக்ஸிலோஃபேஷியல் பிரிவின் டாக்டர் பிரியங்கர் சிங் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களும் அடங்குவர்.
பல்லின் சரியான இடம் மற்றும் அதன் வேர்களின் ஆழத்தைக் கண்டறிய, மேம்பட்ட CBCT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேன் முடிவில், பல் கண்களின் கீழ் உள்ள orbital floor-ல் சிக்கியிருந்தது தெரியவந்தது. இது அறுவை சிகிச்சையை மிகவும் சவாலாக மாற்றியது. இருப்பினும், அறுவை சிகிச்சை குழு பல மணி நேரங்கள் நீடித்த இந்த சிக்கலான பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டது. கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அந்தப் பல்லை வெற்றிகரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ரவி குமாரின் பார்வை பாதுகாக்கப்பட்டதுடன், முகத்தில் இருந்த வீக்கமும் முற்றிலும் குறைந்தது. டாக்டர் நிம்மி சிங், இந்தச் சம்பவம் மிகவும் அரிதானது என்றும், பல் பொதுவாக வாய்க்குள் வளர வேண்டும், ஆனால் இந்த நோயாளிக்கு கண்ணுக்குக் கீழே வளர்ந்திருந்தது என்றும் கூறினார். நவீன ஆய்வு மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்கள் மூலம் இந்த வெற்றி சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சாதனைக்காக, IGIMS இயக்குநர் டாக்டர் பிண்டே குமார், துணை இயக்குநர் டாக்டர் விபூதி பிரசன்னா சின்ஹா, மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மணீஷ் மண்டல் ஆகியோர் மருத்துவக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சை மருத்துவமனையின் திறனுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.