மிதக்கும் உணவகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதாவது உணவகங்கள் தரையில் இருப்பது போல் தண்ணீரில் மிதந்தபடியே இருக்கும். விரைவில் நமது சிங்காரச் சென்னையிலும் ஓர் மிதக்கும் உணவகம் தொடங்கப்பட இருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள டாப் 10 மிதக்கும் உணவகங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ruster Dhow :
உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவகமாக துபாயின் ரூஸ்டர் தோவ் இருக்கிறது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் உணவருந்த முடியும். இந்த உணவகத்திலிருந்து துபாயின் அழகிய காட்சியை நாம் ரசிக்க முடியும். இது உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளையும், மக்களையும் அதிகம் ஈர்த்துள்ளது. இதில் மிகவும் விலை உயர்ந்த உணவுகள் வழங்கப் பட்டாலும் குடும்ப நிகழ்வுகள், வணிகக் கூட்டங்கள், கேண்டில் லைட் டின்னர் போன்ற நிகழ்வுகள் இதில் பிரபலமானது.
Sea Palace :
ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதல் மிதக்கும் சீன உணவகம்தான் Sea Palace என்ற மிதக்கும் உணவகம். இது ஆம்ஸ்டார்டாமில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், அதன் வெளிப்புறத் தோற்றம்தான். பார்ப்பதற்கு ஓர் சீனக் கட்டிடம் போலவே காட்சியளிக்கும். இங்கு கிடைக்கும் சுவையான உணவிற்காகவே விடுமுறை நாட்களில் இந்த மிதக்கும் படகு உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் குவிக்கின்றனர்.
Saigon உணவகம் :
வியட்னாமில் இருக்கும் இந்த உணவகம், ஒரு பிரம்மாண்ட இடத்தில் மலிவு விலையில் உணவருந்த விரும்புபவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கிறது. வியட்னாம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் தலமாக இருப்பதால், இந்த மிதுவை உணவகத்தில் 600 பேர் வரை ஒரே சமயத்தில் உணவருந்த முடியும். வியட்நாமில் மிகவும் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று.
Jumbo மிதக்கும் உணவகம் :
ஹாங்கில் உள்ள அபெர்டீன் துறைமுகத்தில் அமைந்துள்ள ஜம்போ மிதக்கும் உணவகம், எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் தவறவிடக்கூடாத மிதக்கும் உணவகங்களில் ஒன்றாகும். அதன் தனித்துவமான கட்டுமானம் காண்போரை அதன் பக்கம் கட்டாயம் ஈர்க்கும். இந்த உணவகம் 1970களில் நிறுவப்பட்டதாகும். 2003இல் இதை மறு சீரமைப்பு செய்து மூன்று அடுக்குகள் இருக்கும்படி இதைக் கட்டினார்கள்.
Cloud 9 :
கடலில் மிதந்துகொண்டே நீங்கள் உணவருந்த விரும்பினால், Cloud 9 உணவகத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். பிஜியில் மாமனுகா தீவில் இது அமைந்துள்ளது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ ஸ்டைல் உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு முக்கிய இடமாகும். இவர்களுக்கென்று தனியாக மெனுவெல்லாம் கிடையாது. உங்களுக்குப் பிடித்ததை சொன்னால் உடனடியாக அங்கு செய்து தருவார்கள். 2013ல் தொடங்கப்பட்ட இந்த உணவகம், இன்றளவும் பிரபலமான மிதக்கும் உணவகங்களில் ஒன்றாக இருக்கிறது.
Veli Lake மிதக்கும் உணவகம் :
இந்த பதிவில் இருக்கும் டாப் 10 மிதக்கும் உணவகங்களில் இந்தியாவில் இருக்கும் ஒரே உணவகம் இதுதான். அதுவும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இருக்கிறது. திறமையான இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்த மிதக்கும் உணவகம் உள்ளது. இந்தியாவில் தென்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது மிகவும் பிரபலமான இடமாகும். இந்த உணவகம் ஒரு வசதியான மிதக்கும் பாலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளூர் இந்தியர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
Salt & Sill :
இந்த விருது பெற்ற மிதக்கும் கடல் உணவகம் ஸ்வீடனின் தனித்துவமான உணவு வகைகளால் நிரம்பியுள்ளது. ஸ்வீடனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த உணவகம் பாரம்பரிய மிதக்கும் உணவகங்களைப் போல இல்லாமல், பல்வேறு அறிவார்ந்த உணவு வசதிகளையும் கொண்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு தலை சிறந்த உணவு வகைகள் அனைத்தையும் இந்த உணவகத்தில் ஒருவர் ருசிக்கலாம். குறிப்பாக உணவருந்தும் இடத்திற்கு மேல் உள்ள 23 அறைகளில், சுதந்திரமாக ஓய்வெடுக்கலாம். தரையில் இருக்கும் ஹோட்டல் தண்ணீரில் மிதந்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இந்த உணவகம் இருக்கிறது.
PS Tattershall Castle :
லண்டனில் இருக்கும் இந்த உணவகம் நல்ல வரலாற்றைக் கொண்ட ஒரு கோட்டையாகும். 1934 இல் தனித்துவமாக கப்பல் உணவகமாக இருந்த இது, லண்டன் கடற்படைக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வு பெற்றதாகும். பின்னர் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவுக்கூடமாக மாற்றப்பட்டது. இந்த பிரபலமான உணவகம் பாருடன் இணைந்து செயல்படுகிறது. தேம்ஸ் நதியில் பயணித்துக் கொண்டே ஒரு சிறந்த உணவு அனுபவத்தை பெற விரும்பினால் இந்த உணவகத்தில் தாராளமாக நீங்கள் பயணிக்கலாம்.
Cat Ba Bay :
வியட்நாமின் முத்து தீவு என அழைக்கப்படும் Cat Ba தீவில் இது அமைந்துள்ளது. இது வழக்கமான மிதக்கும் உணவகம் போலல்லாமல் பல்வேறு படகுகளாலும் நிரம்பியுள்ளது. இவை அனைத்தையுமே தனித்தனி உணவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு படகும் குறிப்பிடத்தக்க உணவில் நிபுணத்துவம் பெற்ற உணவகங்களின் தொகுப்பாகும். இது ஒரு அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுக்கிறது.
BBQ Donut's மிதக்கும் உணவகம் :
இறுதியாக ஜெர்மனியில் இருக்கும் பிபிக்யூ டோனட் மிதக்கும் உணவகம் இருக்கிறது. இது உண்மையிலேயே தனித்துவமானது தான். பார்ப்பதற்கு ஒரு டோனட் வடிவிலான படகு போல இருக்கும். ஒவ்வொரு டோனட் வடிவ படத்திலும் பத்து பேர் அமர்ந்து உணவருந்தலாம். புதுமையின் உண்மையான வெளிப்படையாகப் பார்க்கப்படும் இந்த உணவகம் ஒர் வித்தியாசமான அனுபவத்தை வழங்கக் கூடியது. இதன் அமைப்பு பிக்னிக் செல்வது போன்ற உணர்வை வாடிக்கையாளர்களுக்குத் தருவதாகக் கூறுகின்றனர்.
வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய உலகின் 10 மிதக்கும் உணவகங்களின் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நான் கூறியது போல் ஒவ்வொரு மிதக்கும் உணவகமும் தனித்துவமானது மேலும் வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. விடுமுறை நாட்களை சிறப்பாக கழிக்க ஒரு நல்ல இடமாக இவை இருந்து வருகிறது. மிதக்கும் உணவு வகைகளில் உள்ள தனித்துவம் என்னவென்றால் அது ஒரு நபருக்கு முற்றிலும் புதுமையான உணவருந்தும் அனுபவத்தை அளிக்கிறது.
அலைகளின் ஓசை, சுற்றி இருக்கும் அழகிய காட்சி, பயணித்துக் கொண்டே உணவருந்துவது அனைத்தையும் ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். உண்மையிலேயே இது ஓர் பரவச அனுபவம்தான். சென்னையில் விரைவில் இதை அனுபவிக்க போகிறோம் என நினைக்கும்போது எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொடுகிறது.