சுற்றுலாப் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய அறிவிப்பு: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

சுற்றுலாப் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய அறிவிப்பு: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இங்கு கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அப்போது வனத்துறையினர் இந்த அருவிப் பகுதியில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை அப்போது வெளியேற்றினர். இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவியின் நீர்வரத்து சீராகும் வரை அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தற்காலிக தடையும் விதித்திருந்தனர்.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதிகளில் மழை குறைந்து நேற்று மாலைக்கு பின் நீர்வரத்து சீரானது. இதனால் இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆனாலும், கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் கூட சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று வனத்துறையினர் அவ்வப்போது தடை விதிப்பது வாடிக்கையே.

கொடைக்கானல் செல்லும் வழியில் இயற்கைச் சூழலிலுள்ள இந்த அருவி இந்தியாவின் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. எனவே தான் இவ்விடம் கும்பக்கரை எனப்படுகின்றது என்றும் ஒரு பேச்சிருக்கிறது. கொடைக்கானல் செல்வதற்கு இந்த அருவியை ஒட்டியும் வழி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், ஆபத்தான அந்த பாதையை பெரும்பாலும் வாகன ஓட்டிகள் பயன்படுத்துவது இல்லை. அந்தப் பாதையை மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களும் அந்தப் பகுதி மலைப்பழங்குடியினரும் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவதாகத் தகவல்.

இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய காட்டுத் தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இந்த இடத்திற்கு கும்பல்கரை என்றொரு பெயர் முன்னர் இருந்திருக்கிறது. அப்பெயரே பின்னர் மருவி கும்பக்கரை என்று மாறியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கும்பக்கரை குறித்த மேற்கண்ட சுவாரஸ்யங்கள் தவிரவும் சுற்றிலும் மாந்தோப்புகள், தென்னந்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், எலுமிச்சை தோட்டங்கள் சூழ்ந்து அந்த அருவிக்குச் செல்லும் பாதை தரும் இதமான பரவசத்துக்காகவும் கூட சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்வதை பெரிதும் விரும்பி வந்தார்கள். திடீரென அருவியில் குளிக்கத் தடை என்றதும் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளான சுற்றுலாப் பயணிகளுக்கு இப்போது தடை நீங்கிய செய்தியானது உச்சி வெயிலில் ஐஸ் மழையில் நனைந்தார் போல மிகப்பெரும் ஆசுவாசம் தருவதாக அமைந்து விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com