
புதிய வரி விதிப்பு நடைமுறை காரணமாக, டொயோட்டாவின் அனைத்து கார்களுக்கும் கணிசமான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மாடல்களுக்கு அதிகபட்ச விலை குறைப்பு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கும் பெரும் பலன் கிடைத்துள்ளது.
பிரீமியம் கார்களான டொயோட்டா கேம்ரி மற்றும் வெல்ஃபயர் ஆகியவையும் புதிய விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
மாடல் வாரியான விலை குறைப்பு விவரங்கள்:
டொயோட்டா ஃபார்ச்சூனர் & ஃபார்ச்சூனர் லெஜெண்டர்: ஜிஎஸ்டி வரி 50%ல் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டதால், ஃபார்ச்சூனர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 3.49 லட்சம் வரையும், ஃபார்ச்சூனர் லெஜெண்டருக்கு ரூ. 3.34 லட்சம் வரையும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்னோவா க்ரிஸ்டா & ஹைகிராஸ்: இன்னோவா க்ரிஸ்டாவின் ஜிஎஸ்டி 50%ல் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டதால், அதன் விலை ரூ. 1.81 லட்சம் வரை குறைந்துள்ளது. இதே வரி குறைப்பால் இன்னோவா ஹைகிராஸுக்கும் ரூ. 1.16 லட்சம் வரை விலை குறைப்பு கிடைத்துள்ளது.
டொயோட்டா ஹைலக்ஸ்: இந்த மாடலுக்கு ரூ. 2.53 லட்சம் வரை விலை குறைப்பு உள்ளது.
டொயோட்டா கிளான்ஸா & டைஸர்: இந்த மாடல்களுக்கான வரி 29%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டதால், கிளான்ஸாவுக்கு ரூ. 85,300 வரையும், டைஸருக்கு ரூ. 1.11 லட்சம் வரையும் விலை குறைப்பு உள்ளது.
டொயோட்டா ரூமியோன்: இந்த மாடலின் வரி 45%ல் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டதால், ரூ. 48,700 வரை பலன் கிடைக்கிறது.
டொயோட்டா ஹைரைடர்: இந்த மாடலுக்கும் ரூ. 65,400 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா கேம்ரி & வெல்ஃபயர்: பிரீமியம் மாடல்களான கேம்ரிக்கு ரூ. 1.02 லட்சம் வரையும், வெல்ஃபயருக்கு ரூ. 2.78 லட்சம் வரையும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் கருத்து: இந்த அறிவிப்பை வெளியிட்ட டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டாரின் துணைத் தலைவர் வரிந்தர் வாத்வா, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றி. இது வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வாங்குவதைச் சுலபமாக்கியுள்ளதுடன், ஒட்டுமொத்த வாகனத் துறையின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
மேலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்த நடவடிக்கை வலுவான உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வரி குறைப்பு, டொயோட்டாவின் உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை வாடிக்கையாளர்கள் இன்னும் எளிதாகப் பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.