தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள். ரயிலைக் கவிழ்க்க சதி?

தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள். ரயிலைக் கவிழ்க்க சதி?

தினசரி தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரியிலிருந்து எழும்பூர் செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியது. 

நள்ளிரவில் சுமார் 1 மணி அளவில் திருச்சியில் வந்து கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தின் நடுவே இரு லாரி டயர்களை யாரோ வைத்திருந்தனர். இதைக் கண்ட ரயில் என்ஜின் டிரைவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக ரயிலை நிறுத்த முயற்சி செய்திருக் கின்றனர். அப்போது ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தண்டவாளத்திலிருந்த இரண்டு டயர்களின் மீதும் ரயில் வேகமாக மோதி இருக்கிறது. மோதிய வேகத்தில் ஒரு டயர் ரயில் சக்கரத்தின் அடிப்பகுதியில் சிக்கியதால், ரயில் இன்ஜின் பெட்டிகளை இணைக்கும் கேபிள் சேதமடைந்து, ரயில் அங்கேயே நின்றது. டயரில் ரயில் மோதியபோது பலத்த சத்தம் ஏற்பட்டதால், ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என உறங்கிக் கொண்டிருந்த பயணிகளும் பதறிப்போனார்கள். 

இந்த சம்பவம் குறித்து ரயில் இன்ஜின் டிரைவர்கள் விருத்தாச்சலம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் கொடுத்த நிலையில், அங்கு உடனடியாக ரயில்வே போலீசார் விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் ரயிலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, சுமார் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை யார் வைத்தது? ஏன் இப்படி செய்தார்கள்? ஒருவேளை ரயிலைக் கவிழ்க்கும் சதியாக இருக்குமா? என்பது குறித்து திருச்சி ரயில்வே காவல்துறை தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன்புதான், லாரி டயர் வைக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அதே பகுதியைச் சேர்ந்தவர் JCB எந்திரத்தை வைத்து பள்ளம் எடுக்க முயற்சித்ததால் போலீசாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் செய்த நபர், "உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்" என மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார். ஒருவேளை கோபத்தில் இவர்தான் இந்த மோசமான செயலை செய்திருப்பாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 

இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில், ரயில் இன்ஜின் டிரைவர்கள் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com