சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து 35 மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சென்னை திருவொற்றியூரியில் ஒரு கிராம பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு காலையிலிருந்தே லேசாக வாயு வெளியேறி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மாலை நேரத்தில் திடீரென்று வாயு அதிகரித்ததால், மாணவர்கள் அவசரமாக வெளியேறியுள்ளனர். இந்த வாயு கசிவினால் மூன்று மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.
இதனையடுத்து 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பள்ளி முழுவதையும் ஆய்வு செய்தனர். வாயு கசிவின் காரணம் தொழிற்சாலையிலிருந்து வந்ததா அல்லது பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால், தகவல் வெளியானதும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, அங்கே பதற்றம் நிலவி வருகிறது. காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போலீஸார் வந்தனர். மேலும், அவர்கள் எங்கிருந்து வாயு கசிவு ஏற்பட்டது, வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை. 3வது தளத்தில் மட்டுமே ஒரு சில மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதேபோல், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 31 பேர் கொண்ட குழு பள்ளிக்கு வருகைத் தந்தனர். அங்கு, ரசாயன வாயு கசிவு பாதுகாப்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.