

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தப் பேருந்து லாரியுடன் மோதியதில் தீப்பற்றி எரிந்ததில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி? கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை-48-ல் அதிகாலை 2:30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு வந்து, பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியது. இதுவே பேருந்து உடனடியாகத் தீப்பற்றக் காரணமாக அமைந்தது.
பேருந்தின் முன்புறத்தில் லாரி மோதியதால், உள்ளே உறங்கிக்கொண்டிருந்த பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. அவசரகால கதவு (Emergency Exit) எங்குள்ளது எனத் தேடுவதற்குள், பேருந்து முழுவதுமாகத் தீப்பற்றியது. 'சீ பேர்ட்' (Sea Bird) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் பேருந்தில், சுமார் 32 பேர் பயணித்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்தில் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், "விபத்து நடந்தபோது மக்கள் அலறிக் கொண்டிருந்தனர். நான் கீழே விழுந்தபோது சுற்றிலும் தீப்பிடித்திருப்பதைக் கண்டேன். எங்களால் பேருந்துக் கதவைத் திறக்க முடியவில்லை. கண்ணாடியை உடைத்து வெளியேற முயன்றோம். மற்றவர்களைக் காப்பாற்ற நாங்கள் முயன்றாலும், தீ மிக வேகமாகப் பரவியதால் நிலைமை மோசமாகிவிட்டது," எனத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள்: விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காவல்துறையினர் விபத்து குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது தொழில்நுட்பக் கோளாறா எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.