

2016-ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவின் முதன்மை டெலிகாம் துறையாக மாறியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களும் ஜியோவை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இ-காமர்ஸ், நிதித்துறை தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இன்றைக்கு ஜியோ முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. 47 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு உள்ளார்கள்.
கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடம் செயல்படக்கூடிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பாரபட்சமான கட்டண முறைக்கு TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) செக் வைத்துள்ளது.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ஆரம்பநிலை பிரீபெய்டு திட்டங்களை ரத்து செய்தது. அவை சில்லறை கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்தது. இதுபற்றி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்)(TRAI) விசாரிக்க தொடங்கியது.
அதன் முடிவில் ஜியோ நிறுவனத்திற்கு டிராய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஜியோவின் சில கட்டண திட்டங்கள் பாரபட்சமானவையாகவும், வெளிப்படையான விதிமுறைகளுக்கு முரணானதாகவும் இருப்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட சாதனங்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது, தொலைத்தொடர்பு கட்டண உத்தரவு 1999-க்கு எதிரானது என TRAI குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்து பிளாட்பார்ம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான ரீசார்ஜ் திட்டங்களை அணுகும் வாய்ப்பை தர வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
ஜியோபோன், ஜியோபாரத் போன்ற சாதனங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்ட மலிவான கட்டணத் திட்டங்களை (ரூ.249, ரூ.199, ரூ.209) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கிடைக்கச் செய்யுமாறு ஜியோவிற்கு TRAI உத்தரவிட்டுள்ளது.
இல்லையெனில் ஜியோ போன், ஜியோ பாரத் போன்ற குறிப்பிட்ட செல்போன்களுக்கான சலுகை கட்டண திட்டங்களையும் ரத்து செய்யுமாறு கூறியுள்ளது. இவற்றை கடைப்பிடிக்க 14-ம்தேதி வரை ஜியோவுக்கு ‘கெடு’ விதித்துள்ளது.
ஜியோ தனது கட்டணங்கள் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை என்று கூறினாலும், TRAI-ன் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.