

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள ரோஹினி பகுதியில் இன்று காலை பெரும் ரயில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஜஷிடிஹ் - ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள ஒரு லெவல் கிராசிங்கில், கோண்டா - அசன்சோல் எக்ஸ்பிரஸ் (Gonda-Asansol Express) ரயில் வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது பலமாக மோதியது.
காலை 9:38 மணியளவில் லாரி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில்வே கேட் மூடப்படாத நிலையில் இந்த மோதல் ஏற்பட்டது. மோதிய வேகத்தில் லாரி உருக்குலைந்து போனதுடன், ரயிலின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தின்போது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கின. விபத்தை உணர்ந்த ரயில் ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அசன்சோல் பிரிவின் மூத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான லாரி மற்றும் சேதமடைந்த ரயில் எஞ்சின் அகற்றப்பட்டு, காலை 10:55 மணியளவில் மீண்டும் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.