

பாதை இங்கே பயணம் எங்கே என்ற தலைப்பில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பேரளம் காரைக்கால் இடையே புதிய அகலப் பாதை போடப்பட்டு இன்னும் பயணிகள் போக்குவரத்து இயக்கப்படாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தெற்கு ரயில்வே இந்த பாதையில் மே 20 ந் தேதி முதல் பயணிகள் சேவை இயக்கப்படும் என்று பின்னர் அறிவித்தது.அதன்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு காரைக்காலில் இருந்து கொடியசைத்து புதிய சேவை மயிலாடுதுறை வரை துவக்கி வைக்கப்பட்டது.
மாலை 04.40 மணியளவில் மயிலாடுதுறையிலிருந்து வேளாங்கண்ணி வரையிலான பயணிகள் ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இந்த சேவை மயிலாடுதுறையில் இருந்து பேரளம், அம்பகரத்தூர், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்லும். இந்த சேவை மூலம் சுமார் 40 கி மீ சுற்றிக்கொண்டு போவது தவிர்க்கப்படுகிறது.இங்கிருந்து அங்க போயி அங்கிருந்து அங்க போகலாம் என்று பேச்சுத் தமிழில் சொல்வதும் நிறுத்தப்படுகிறது.இது பயணிகள் ரயில் பாதை அல்ல...சில பெரிய நிறுவனங்களுக்காக போடப்பட்டது என்று சில விஷமிகளால் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது. அவை அத்தனையும் இன்று முடிவுக்கு வந்துவிட்டது.
அனைத்து மதத்திற்கான பாதையாக இந்த பாதை அமைந்துள்ளது.இந்த பாதையில் சென்னை வேளாங்கண்ணி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரு, புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும், நாகை மற்றும் மயிலாடுதுறையில் பணிபுரிபவர்கள் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரிக்கு செல்பவர்களுக்கு வசதியாக புதிய பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.