இன்று தமிழகத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 4 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப் போவதாகவும், இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாகவும் நாகை மாவட்ட மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ் தெரிவித்தார்.
திருவாரூா், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தெற்கு ரயில்வே துறை தொடர்ந்து நிராகரித்து வருவதைக் கண்டித்து இன்று 4 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக செல்வராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது ‘’ரயில்வே துறையினருடன் பலமுறை இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனுமில்லை. ரயில்வே கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று திட்டமிட்டபடி டெல்டா மாவட்டங்கள் 4-ல் தொடா் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும்’’ என்று அவர் தெரிவித்தார்.
திருவாரூா் மாவட்டத்தில் கொரடாச்சேரி, பேரளம், முத்துப்பேட்டை ஆகிய மூன்று இடங்களிலும், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூரிலும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.